TN TRB SGT: அரசுப்பள்ளி ஆசிரியர் ஆகலாம்; 1768 காலி இடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
TN TRB SGT Notification 2024: தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சேர நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களில் சேர நடத்தப்படும் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி இடங்கள் இருக்கும் நிலையில், 1768 இடைநிலை ஆசிரியர் காலி இடங்களை நிரப்பத் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இந்தப்பணிக்கு விண்ணப்பிக்க மார்ச் 15 வரை நேரம் வழங்கப்பட்டு இருந்த நிலையில், அவகாசம் மார்ச் 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம்
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் இடைநிலை ஆசிரியர் - 2024 ஆம் ஆண்டிற்கான காலிப் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை பிப்ரவரி 9ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.03.2024 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்கள் பலரும் இணையவழியாக விண்ணப்பம்பதிவேற்றம் செய்ய கூடுதல் கால அவகாசம் கோரினர். அதன் அடிப்படையில் மேற்காண் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய கடைசித் தேதி 15.௦3.2024-ல் இருந்து 20.03.2024 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
மார்ச் 23ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் திருத்தம்
மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில், இடைநிலை ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் (Edit Option) மேற்கொள்ள விரும்பினால் 21.03.2024 முதல் 23.03.2024 மாலை 5 மணி வரை திருத்தம் செய்யலாம். இதற்காக ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
* இடைநிலை ஆசிரியர் பணி இடங்களுக்கான தேர்வுகளுக்கு https://trb1.ucanapply.com/login என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
* லாகின் ஐடி மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளிட்டு, விண்ணப்பிக்கலாம்.
இதற்கு முன்னதாக, விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கல்வித் தகுதி, காலி இடங்கள், வயது வரம்பு, தேர்வு முறை, விண்ணப்பிக்கும் வழிமுறை ஆகியவை குறித்த முழுமையான தகவல்கள் அடங்கிய அறிவிக்கையை https://www.trb.tn.gov.in/admin/pdf/994791851SGT%20Notification%20%20-%202024.pdf என்ற இணைப்பில் காணலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/