Engineering Admission: முடிந்த துணைக் கலந்தாய்வு; பொறியியல் மாணவர் சேர்க்கை எப்படி? காலியாக இருக்கும் 44,084 இடங்கள்..
2023- 24ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான துணைக் கலந்தாய்வின் முடிவில் 44,084 இடங்கள் காலியாக உள்ளன.
2023- 24ஆம் கல்வியாண்டில் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்வதற்கான துணைக் கலந்தாய்வுக்கு மொத்தம் 53 ஆயிரத்து 311 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 9247 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்துள்ளனர். இதையடுத்து 44,084 இடங்கள் காலியாக உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் அங்கீகாரம் பெற்ற 442 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்தி வருகின்றன. ஒற்றைக் கலந்தாய்வு முறையில் மாணவர்கள் விண்ணப்பிக்க 1,60,780 பொறியியல் இடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பொதுப் பிரிவுக்கு 1,48,721 இடங்களும் 7.5 சதவீத ஒட ஒதுக்கீட்டுக்கு, 12,059 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இவற்றுக்கான 3 கட்டக் கலந்தாய்வு நடந்து முடிந்த நிலையில், பொறியியல் படிப்பில் சேர 50,000-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருந்தன. இந்த நிலையில் துணைக் கலந்தாய்வு அறிவிக்கப்பட்டு, நடத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் கூறியதாவது:
துணைக் கலந்தாய்வின் முடிவில் பொதுப் பிரிவில் மாணவர்களுக்கு, 50,416 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 12,978 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 10,108 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 9,633 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 8,713 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர்.
அதேபோல, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களுக்கு, 784 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 4,388 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 905 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 450 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 360 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர்.
அதே நேரத்தில் தொழிற்கல்வி பொதுப் பிரிவின் கீழ் மாணவர்களுக்கு, 2027 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 266 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 187 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 176 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 156 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர்.
தொடர்ந்து தொழிற்கல்வி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மாணவர்களுக்கு, 84 இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் விண்ணப்பிக்க 78 மாணவர்கள் தகுதி பெற்றிருந்தனர். இதில், 21 மாணவர்கள் கல்லூரிகளைத் தேர்வு செய்தனர். இதில், 20 பேருக்குத் தற்காலிக இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், 18 மாணவர்கள் தங்களுக்கான இடத்தை உறுதி செய்தனர்.
44 ஆயிரம் இடங்கள் காலி
இதன்மூலம் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான துணைக் கலந்தாய்வில் சேர மொத்தம் 53 ஆயிரத்து 311 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதும் இதில், 9 ஆயிரத்து 247 இடங்களில் மாணவர்கள் சேர்ந்ததும் தெரிய வருகிறது. இதனால் 44 ஆயிரத்து 84 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை மைய செயலாளர் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: Exam Time Table: பொது வினாத்தாளுடன் கூடிய காலாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு- தேர்வுத் தேதிகள் இதோ!