பள்ளி வகுப்பில் பட்டப்பகலில் பாலியல் வன்கொடுமை; காமுகர்களாக மாறிய ஆசிரியர்கள்- என்னதான் தீர்வு?
வேலியே பயிரை மேய்வதுபோல, வகுப்புகளிலும் பள்ளி வளாகங்களிலும் பட்டப்பகலிலேயே ஆசிரியர்கள் சிலர் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தி உள்ளனர்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் இரண்டாம் பெற்றோர்களாகப் போற்றப்படுபவர்கள் ஆசிரியர்கள். அவர்களில் சிலரே பிஞ்சுப் பெண் குழந்தைகளைச் சிதைக்கும் கொடூரர்களாக மாறி வரும் அவலம், நெஞ்சைப் பிழிகிறது.
பள்ளி மாணவிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவங்களைக் கேட்டிருக்கிறோம். அந்த கொடூரங்கள் எல்லாம், பெரும்பாலும் நெருங்கிய உறவினர்களாலோ, அக்கம்பக்கத்தாராலோ அல்லது நண்பர்களாலோ நிகழ்த்தப்பட்டிருக்கும்.
ஆனால் கடந்த 4 நாட்களாகக் காதில் விழும் செய்தி அப்படியில்லை. வேலியே பயிரை மேய்வதுபோல, வகுப்புகளிலும் பள்ளி வளாகங்களிலும் பட்டப்பகலிலேயே ஆசிரியர்கள் சிலர் பாலியல் வன்கொடுமை நிகழ்த்தி உள்ளனர்.
சம்பவம் 1: கிருஷ்ணகிரி
போச்சம்பள்ளி அருகே அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில், 8ஆம் வகுப்பு மாணவி ஜனவரி 3ஆம் தேதி அன்று அங்கு பணியாற்றிய சின்னசாமி, ஆறுமுகம், பிரகாஷ் என்னும் காமக் கொடூரன்களால் அங்கிருந்த கழிப்பறையில் வைத்து வேட்டையாடப்பட்டார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கருக்கலைப்பு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குற்றம் செய்த மூவரும் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 2 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, புதிதாக பணியிட மாற்றம் செய்த 4 பெண் ஆசிரியர்கள் பணியில் இணைந்தனர். ஆனாலும் பள்ளிக்கு மாணவர்களை அனுப்ப பெற்றோர்கள் தயாராய் இல்லை.
சம்பவம் 2: சேலம்
கிருஷ்ணகிரி, சேலம், சேலம், ஓமலூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் சிவக்குமார், போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியர் அளித்த புகாரை அடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சம்பவம் 3: மணப்பாறை
திருச்சி மாவட்டம், மணப்பாறையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 4ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பள்ளி தாளாளரின் கணவர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பள்ளி தலைமை ஆசிரியரும் சரண் அடைந்துள்ளார்.
சம்பவம் 4: சிவகங்கை,
சம்பவம் 5: திருச்சி என குற்றப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.
இந்த அவலம் குறித்து குழந்தை நேய செயற்பாட்டாளர் தேவநேயன் ஏபிபி நாடுவிடம் விரிவாகவும் வேதனையுடனும் பேசினார்.
’’இந்தியா முழுவதும் எல்லா இடங்களிலும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்திருக்கிறது என்று என்சிஆர்பி ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த வன்முறை பள்ளிகளிலும் அதிகரித்திருக்கிறது. ஆனால் பள்ளிகளில் நிகழும் வன்முறை அதிக ஆபத்தானது.
என்ன காரணம்?
பள்ளி கல்வியை மட்டுமே கற்றுக்கொடுப்பதில்லை. ஆளுமையையும் நல்வழியையும் கற்றுக் கொடுக்கிறது. பள்ளியை விட்டு பாதியில் வெளியேறும் மாணவர்கள்தான் குழந்தைத் தொழிலாளர்கள் ஆகின்றனர். குழந்தைத் திருமணம், சிறார் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
இந்த சூழலில் பாதுகாப்பான பள்ளியில், பகல் நேரத்திலேயே பாலியல் வன்முறை நிகழ்த்தப்படுவது மிகவும் கொடுமையானது. ஏற்றுக்கொள்ளவே முடியாது. எந்த நம்பிக்கையில் நம் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவது என்று கேள்வி எழுகிறது.
இவற்றுக்கெல்லாம் தற்காலிகத் தீர்வாக போக்சோ சட்டம் 2012ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. கோவையில் 2 பெண் குழந்தைள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சூழலில், அப்போதைய முதன்மைச் செயலர் சபிதா உத்தரவின் பேரில், அரசாணை 121 கொண்டு வரப்பட்டது. ஆனால் அதைக் குறித்த விழிப்புணர்வு யாருக்குமே இல்லை’’ என்கிறார் தேவநேயன்.
அரசாணை எண் 121 சொல்வது என்ன?
தவறான நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அவர்களுக்கு கடும் தண்டனையான கட்டாய ஓய்வு / பணி நீக்கம் (1604) / பணியறவு போன்ற தண்டனை வழங்கப்படும். அரசுப் பள்ளி ஆசிரியர்களைப் பொறுத்தவரையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதி 19 (2) இதற்குப் பொருந்தும். இவ்விதியை மீறுபவர்களுக்கு மேற்குறிப்பிட்ட தண்டனைகளுள் ஒன்று வழங்கப்பட வேண்டுமென தமிழ்நாடு குடிமைப் பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 8-ல் கூறப்பட்டுள்ளது.
கல்விச் சான்றுகள் ரத்து
அதேபோல சம்பந்தப்பட்ட ஆசிரியரின் கல்விச் சான்றுகள் அனைத்தையும் ரத்து செய்ய சார்ந்த துறை மூலம் நடவடிக்கை எடுத்து கல்விச் சான்றுகளை ரத்து செய்யப்படும்.
ஆனால் எந்த ஆசிரியர் மீதும் இத்தகைய கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. குற்றமிழைத்த ஆசிரியர்களுக்கு இதுவரை அளிக்கப்பட்ட தண்டனை என்ன என்று கேட்டதற்கு, யாரிடமுமே அதற்கு விடை இல்லை என்கிறார் தேவநேயன்.
மேலும் அவர் பேசும்போது, ’’ஏற்கெனவே நடந்த, புதிதாக நடக்கப் போகும் சம்பவங்களைத் தடைசெய்யும் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. தண்டனை அளிக்கப்படும் விவரங்களையும் அளிக்கவில்லை. முதலில் தண்டனை அளிக்கப்பட்டதா என்றே தெரியவில்லை.
போக்சோ சட்டம் அறிமுகமானதில் இருந்து, 13 ஆண்டுகளாக பள்ளிகளில் மாநிலம் முழுவதும் சுமார் 250 – 300 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவாகி இருக்கலாம். இதுகுறித்து அரசிடம் ஆர்டிஐ மூலம் கேள்வி கேட்டேன். இதுவரை பதில் இல்லை. காவல் நிலையத்தில் கேட்டபோது, கடந்த 2 ஆண்டுகளில் தலா 45- 50 வழக்குகள் காவல் நிலையத்தில் பதிவாகி உள்ளதாகத் தெரிவித்தனர்.
சாதாரண ஆட்கள் பாலியல் வன்கொடுமை செய்வதற்கும் கடமையாளர்கள் அதில் ஈடுபடுவதற்கும் வித்தியாசம் உண்டு. ஆசிரியர்கள், காவல்துறையினர், சமூக சேவகர்கள் உள்ளிட்ட கடமையாளர்களுக்கு 7 ஆண்டுகளுடன் கூடுதலாக 3 ஆண்டுகள் விதிக்கப்படும். ஆனால் அவ்வாறு நடப்பதில்லை.
அரசு மெளனம் காப்பது ஏன்?
இவ்வாறு குற்றத்தில் ஈடுபட்ட 10 ஆசிரியர்களுக்கு தண்டனை கொடுத்திருந்தால், இன்று மீண்டும் இப்படி நடந்திருக்குமா?
கிருஷ்ணகிரி சம்பவத்தில் இன்று ஆசிரியர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போக்சோ சட்டம் குறித்தும் அரசாணை 121 பற்றியும் சொல்லாத கல்வித்துறை அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? அமைச்சர் வரை இதற்குப் பொறுப்பாளர்கள்தான். அவர்களும் கடமை தவறி இருக்கின்றனர். ஆனால் அரசு மெளனம்தான் காக்கிறது.
குழந்தைத் திருமணங்கள் அதிகம் நடைபெறக் கூடிய, ஆண்- பெண் விகிதம் குறைவாக உள்ள, ஊட்டச்சத்து குறைவான நபர்கள் நிறைந்த மாவட்டங்களில் முக்கியமானது கிருஷ்ணகிரி. அங்கு அரசுப் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்புக்கு ஒரு சிறுமி வந்து படிப்பதே பெரிய விஷயம். ஆனால் அவர் தன் படிப்பைத் தொடர, உகந்த சூழல் உருவாக்கப்பட்டு இருக்கிறதா?
இரும்புத் திரையான கல்வித்துறை
கல்வித்துறையில் விரும்பத்தகாத சம்பவம் ஏதாவது நடந்தால் உடனே ரியாக்ட் செய்வீர்கள். சம்பவ இடத்துக்குப் போவீர்கள். ஆய்வுக் கூட்டம் நடத்துவீர்கள். பின்பு அப்படியே விட்டுவிடுவீர்கள். தீர்வுதான் கிடைத்தபாடில்லை. இரும்புத் திரை போட்ட துறையாகத்தான் பள்ளிக் கல்வித்துறை இருக்கிறது.
இதுபோதாதென்று பாலியல் சம்பவங்கள் பற்றி ஆசிரியர் சங்கங்கள் வாயே திறப்பதில்லை. வாழ்வாதாரம் மட்டுமே வாழ்க்கையா?’’ என்கிறார்.
பள்ளிகளில் நடக்கும் அவலங்களுக்கு என்னதான் தீர்வு?
அவரிடமே கேட்டேன்.
- அனைத்துப் பள்ளிகளிலும் குழந்தை பாதுகாப்பு கொள்கை உருவாக்கப்பட்டு, அமல்படுத்தப்பட்டு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.
- இதுவரை நடந்த பாலியல் சம்பவங்கள் குறித்து வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
- இதில் ஆசிரியர் சங்கங்கள் தலையிட வேண்டும்,
- இனிமேல் நடக்காமல் இருக்க, அரசாணை எண் 121-ஐக் கடுமையாக அமல்படுத்த வேண்டும்.
- கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட பின் தங்கிய மாவட்டங்களில் ஆசிரியர்கள் பலர் முறையாக பள்ளிக்குச் சென்று கற்பிப்பதில்லை. வேறு பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அத்தகைய ஆசிரியர்களின் பொருளாதார சூழல், பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்.
- பிற பள்ளிகளில் இத்தகைய சம்பவம் நடந்திருக்கிறதா என்று விசாரிக்கப்பட வேண்டும்.
- கும்பகோணம் தீ விபத்துக்கு அமைக்கப்பட்ட சம்பத் ஆணையம் போல, பாலியல் குற்றங்களுக்குத் தீர்வு காண, ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஓர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
- ஆசிரியர்கள் குழந்தை பாதுகாவலராக மாற வேண்டும்.
- குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை அதிகரித்து வருவது குறித்தும் குற்றவாளிகள் மீதும் மருத்துவ, உளவியல், உடலியல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்கிறார் குழந்தை நேயச் செயற்பாட்டாளர் தேவநேயன்.
கல்வி கற்பிக்க வேண்டிய ஆசிரியர்களே காமுகர்களாக மாறினால், அவர்களுக்கு அரசு உடனடியாகப் பாடம் கற்பிக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாகவும் வேண்டுகோளாகவும் ஆதங்கமாகவும் உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

