TN RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஏப்.3-ஆம் வாரத்தில் தொடக்கம்
TN RTE School Admission 2024: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பணிகள், ஏப்.3ம் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
![TN RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஏப்.3-ஆம் வாரத்தில் தொடக்கம் TN RTE School Admission 2024-25 application starts in April 3rd week check how to apply online TN RTE Admission: தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை: ஏப்.3-ஆம் வாரத்தில் தொடக்கம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/28/4dee842741314fec906dc9c5b67759521711611643635332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான பணிகள், ஏப்.3ம் வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் 37 ஆயிரத்துக்கும் மேல் அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. அதேபோல 8,500-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இங்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இடங்கள் பொருளாதாரத்தில் நலிவடைந்தோரின் குழந்தைகளுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.
அது என்ன கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்?
மத்திய அரசின் இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி (ஆர்டிஇ சட்டம்- RTE) சிறுபான்மையினர் பள்ளிகள் அல்லாத, தனியார் சுயநிதிப் பள்ளிகளில் படிக்க சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். நர்சரி, பிரைமரி, மெட்ரிக் தனியார் பள்ளிகளோடு, ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இந்த மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு ஆகும் செலவினங்களை சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு அரசே வழங்கி வருகிறது.
2011 முதல் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்
இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் கடந்த 2009-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. நாடு முழுவதும் 2010-ஆம் ஆண்டு இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. தமிழக அரசு கடந்த 2011ஆம் ஆண்டு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தியது. 2013 முதல் இந்த திட்டம் தமிழகத்தில் அமலில் உள்ளது.
1.10 லட்சம் இடங்கள்
இதன்கீழ் இதுவரை 4.60 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்க்கை பெற்று படித்து வருகின்றனர். இந்த சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேர்பவர்கள் 8-ம் வகுப்பு வரை கட்டணமின்றி தனியார் பள்ளிகளில் இலவசமாகப் படிக்கலாம்.
இந்த நிலையில் 2024- 25ஆம் கல்வி ஆண்டில் அரசுப்பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 3-வது வாரத்தில் தொடங்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
சட்டப்படி சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் பள்ளி கல்வித்துறையின் rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அந்தந்தப் பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் பெறப்பட்டால் பெற்றோருக்கு ஒப்புகைச் சீட்டைத் தவறாது வழங்க வேண்டும்.
விண்ணப்பங்களைப் பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்யலாம். இதுதவிர, முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகங்கள், வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களிலும் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம்.
கூடுதல் தகவல்களுக்கு: https://tnschools.gov.in/rte/
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)