Teachers Transfer Counselling: அனைத்து ஆசிரியர்களும் பொது மாறுதல் கலந்தாய்வு: விண்ணப்பிக்க ஜூன் 25 கடைசி- என்னென்ன விதிகள்?
TN Teachers Transfer Counselling 2025: 2025-26ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எமிஸ் இணையதள வாயிலாக நடைபெற உள்ளது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வுக்கு எமிஸ் தளம் வழியாக ஜூன் 25ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டின் அரசு பள்ளிக் கல்வித்துறையின் கீழ் சுமார் 37 ஆயிரம் அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இவற்றில் சுமார் 2.25 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு அடுத்த மாதம் நடைபெறுகிறது.
பொது மாறுதல் கலந்தாய்வு
2025-26ஆம் கல்வியாண்டில் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வினை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இக்கலந்தாய்வு கல்வி ததவல் மேலாண்மை முகமை (EMIS) இணையதள வாயிலாக நடைபெறும். அதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும், மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து அறிவுரைகளை பின்பற்றி செயல்பட வேண்டும் எனவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 19.06.2025 முதல் 25.06.2025 மாலை6 மணி வரை எமிஸ் இணையத்தில் பதிவேற்றம் மேற்கொள்ளலாம்.
பொதுவான அறிவுரைகள்
- மேல்நிலைப் பிரிவில் உயிரியியல் பாடப்பிரிவில் பணிபுரியும் முதுகலை ஆசிரியர்கள் பொதுமாறுதல் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்யும்போது தாம் பயின்ற மெயின் பாடப்பிரிவு குறிப்பிடப்பட வேண்டும். எந்த பணியிடத்தில் பணிபுரிகிறார் என்ற விவரத்தினையும் குறிப்பிடப்பட வேண்டும்.
- கணவன்- மனைவி முன்னுரிமையில் மாறுதல் கோரி விண்ணப்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர்கள் பணிபுரியும் அலுவலகம் / பள்ளி அரசு மற்றும் அரசுத் துறையின் நிர்வாகத்தின் கீழ் உள்ளதா என்ற விவரத்தினையும், அதற்கான உரிய அலுவலரிடம் பெறப்பட்ட சான்றினையும் பதிவேற்றம் செய்யப்படவேண்டும்.
- கணவன் - மனைவி பணிபுரியும் இடத்திற்கான தொலைவு 30 கி.மீ. மேல் உள்ளதை சரிபார்த்து உறுதி செய்யப்படவேண்டும்.
- மனமொத்த மாறுதல்கள் சார்பான விண்ணப்பங்கள், பொது மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்னர் விண்ணப்பிப்பது சார்ந்து அறிவுரைகள் பின்னர் வழங்கப்படும்.
- மாறுதல் கோரி விண்ணப்பித்த ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறுகள் ஏதும் பின்னர் கண்டறியப்படின் தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
- ஆசிரியர்களின் விண்ணப்பங்களுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் தாமதமின்றி ஒப்புதல் தரவேண்டும்.
கலந்தாய்வு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு பதவி வாரியாக கால அட்டவணையினை பின்னர் அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.






















