TN Govt School Admission: அசத்தும் அரசுப்பள்ளிகள்: 13 நாட்களில் 1.5 லட்சத்தைத் தாண்டிய மாணவர் சேர்க்கை!
TN Government School Admission : தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கை தொடங்கிய பதின்மூன்றே நாட்களில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1.5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. இதோ மேலும் விவரங்கள்..
TN Government School Admission : மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை தொடங்கி பதிமூன்றே நாட்களில், அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 1. 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளில் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. வழக்கமாக ஒவ்வொரு கல்வி ஆண்டும் முந்தைய ஆண்டு ஜூன் மாதத்தில் இருந்து அடுத்த ஆண்டு மே மாதம் வரை செயல்படும். தேர்வு விடுமுறைக்குப் பிறகு ஜூன் மாதத்தில் மாணவர் சேர்க்கை தொடங்கும். எனினும் தற்போதெல்லாம் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை தொடங்கி விடுகிறது.
மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை
தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதலே மாணவர் சேர்க்கை தொடங்கிவிடும் நிலையில், தற்போது தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகள் அனைத்திலும் மார்ச் 1ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகின்றது.
அரசுப் பள்ளிகளில் சேரும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் இலவச நோட்டுப் புத்தகங்கள், சீருடை, காலணி, உணவு, எழுதுபொருட்கள் என அனைத்துமே இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. உண்ண உணவு, உடுத்த உடை ஆகியவற்றுடன் தொழில் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு, பல்வேறு விதமான உதவித் தொகைகள், கல்லூரிகளில் உயர் கல்வி சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ரொக்கம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கும் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
57 வகையான திட்டங்கள்
இவை தவிர்த்து, நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, எண்ணும் எழுத்தும், கலைத் திருவிழா, நம் பள்ளி நம் பெருமை, மாணவர் மனசு, நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி, வானவில் மன்றம், அனைவருக்கும் ஐஐடிஎம், மணற்கேணி, தமிழ்க் கூடல், திறனறித் தேர்வுகள், விழுதுகள் உள்ளிட்ட 57 வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
1.5 லட்சத்தைத் தாண்டிய எண்ணிக்கை
இந்த நிலையில், அரசின் பல்வேறு திட்டங்களையும் உதவித் தொகைகளையும் எடுத்துக்கூறி மாநிலம் முழுவதும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 38 மாவட்டங்களிலும், 1.57 லட்சத்தைத் தாண்டி மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி, சேலம் மாவட்டங்களில் மாணவர்களின் சேர்க்கை 12 ஆயிரத்தைத் தாண்டி உள்ளது. ஜூன் மாதத்தில் மாணவர்கள் சேர்க்கை முடியும்போது, இந்த எண்ணிக்கை புதிய உச்சம் தொடும் என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.