Dr Radhakrishnan Award: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கே சவால்; 440 பேர் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளி- பின்னணியில் நவீன ஆசிரியர்!
Tn Govt Radhakrishnan Award: காஞ்சிபுரம் திருப்புக்குழி அரசு தொடக்கப் பள்ளியை சேர்ந்த ஆசிரியர் செல்வகுமாருக்கு ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது.
மாதா, பிதா, குரு, தெய்வம் என கூறுவார்கள். தெய்வமே ஆசிரியருக்கு அடுத்த இடத்தில் வைத்துதான் பார்க்கப்படுகிறது. ஆசிரியர் பணி என்பது மிகவும் போற்றுதலுக்குரிய பணியாக உள்ளது. ஒவ்வொரு மாணவரும் வருங்காலத்தில், தலைசிறந்த மனிதராக விளங்குவதற்கு ஆசிரியர்களின் பணி தன்னலமற்றது. ஒவ்வொரு ஆசிரியரும் காலத்திற்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
ஆசிரியர்கள் தங்களை காலத்திற்கு ஏற்றார் போல் கட்டமைத்து, நவீன உலகத்திற்கு ஏற்றவாறு மாணவர்களுக்கு பாடத்தை சொல்லிக் கொடுக்க வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட திருப்புட்குழி அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரின் முயற்சியால் சிறந்த பள்ளியாக விளங்கி வருகிறது.
திருப்புக்குழி அரசுப் பள்ளி
திருப்புட்குழி அரசுப் பள்ளி காஞ்சிபுரத்தில் உள்ள மிக பழமையான பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. 110 ஆண்டுகளைக் கடந்த பள்ளியாக திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளி நூற்றாண்டுகளை கடந்த பொழுதும், தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் வகையில் சிறப்பாக செயல்பட்டு வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்குப் பின்னணியில் அந்த பள்ளியின் இடைநிலை ஆசிரியராக பணியாற்றும் செல்வகுமார் இருந்து வருகிறார்
க்.யூ.ஆர் கோடு மூலம் அசத்தும் பள்ளி
திருப்புட்குழி அரசு பள்ளி தனித்துவமாக திகழ்வதற்கு, முக்கிய காரணமாக இருக்கும் ஆசிரியர் செல்வகுமார், தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கற்பித்தல் உத்தியை மேற்கொண்டு வருகிறார். க்.யூ.ஆர் கோடு மூலம் ஆன்லைன் வகுப்புகள், ஆன்லைன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 3d- 4d அனிமேஷன் வழி கற்றல் , டிஜிட்டல் ஸ்மார்ட் அடையாள அட்டை, க்.யூ.ஆர் மூலம் வீட்டுப்பாடம், கற்றல் கற்பித்தலில் தொழில்நுட்பம், வீடியோ தொகுப்புகள், கலந்துரையாட உதவும் ஒவ்வொரு குழுவிற்குமான ஒலிபெருக்கிகள், மாணவர் பெயர் எழுதிய பெயர் பலகைகள், google மொழிபெயர்ப்பு கருவி, என பல்வேறு வகையான தொழில்நுட்பங்கள் மூலம் மாணவர்களுக்கு புதுமையான முறையில் கற்பித்தலை மேற்கொண்டு வருகிறார் ஆசிரியர் செல்வகுமார்.
கோவிட் காலத்தில் சிறப்பான சேவை
பத்து ஆண்டுகளாக பள்ளியில் நவீன முறையில் , ஆன்லைன் வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததால் இப்பள்ளியில் கோவிட் தொற்று காரணத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் சிறப்பாக நடத்தப்பட்டன. கோவிட் காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் அடங்கிய க்.யூ.ஆர் ஒவ்வொரு கிராமத்திலும் வைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதை சிறப்பாக செயல்படுத்த இந்த பள்ளிக்கு ஏற்கனவே இருந்த கட்டமைப்பே காரணம் என்பதில் மாற்று கருத்து இல்லை.
தனியார் பள்ளிக்கு சவால்
அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், தனியார் பள்ளிக்கு படையெடுப்பது வழக்கமான ஒன்று. ஆனால் தனியார் பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கையோ குறைவுதான். ஆனால் திருப்புட்குழி அரசு பள்ளிக்கு எப்பொழுதுமே தனியார் பள்ளியைச் சேர்ந்த மாணவர்களை பெற்றோர்கள் ஆர்வமுடன், சேர்த்து விடுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
2013 -2014 கல்வி ஆண்டில் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளின் எண்ணிக்கை 216 ஆக இருந்தது. நவீன முறையில் கற்றல் துவங்கிய நிலையில், பள்ளியின் மாணவர் சேர்க்கை படிப்படியாக அதிகரித்து இந்த ஆண்டு 440 ஆக உயர்ந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் 10 ஆண்டுகளில் மாணவர்களின் சேர்க்கை 100 சதவீதமாக உயர்ந்து சாதித்து காட்டியுள்ளது.
காஞ்சிபுரம் செல்வகுமார்
ஒரு வகுப்பறையை எவ்வாறு தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாற்றி அமைக்க முடியும் என்பதற்கு ஆசிரியர் செல்வகுமார் உதாரணமாக திகழ்கிறார். இவரை காஞ்சிபுரம் செல்வக்குமார் என்று அழைக்கின்றனர்.
இதுவரை ஆசிரியர் செல்வகுமார் தேசிய தகவல் தொழில்நுட்ப விருது -2017, கனவு ஆசிரியர் விருது -2018 ஆகிய விருதுகளை பெற்றுள்ளார். தற்பொழுது அவருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்பட உள்ளது. செல்வகுமார் போன்று அர்ப்பணிப்புடன் செயல்படும் ஆசிரியர்களால், இது போன்ற விருதுகள் இன்னும் கவுரவம் பெறும் என்பதில் மாற்று கருத்து இல்லை.