(Source: Poll of Polls)
Temporary Teachers Appointment: எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கு ரூ.5 ஆயிரம் சம்பளத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: அரசு உத்தரவு
அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி ,யுகேஜி வகுப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
அங்கன்வாடி மையங்களில் செயல்படும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக அதாவது 2018ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சிக் காலத்தில் அரசுப் பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. மாநிலம் முழுவதும் 2381பள்ளிகளில் இவை செயல்பட்டு வந்தன. இதன் மூலம் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வந்தது. அவர்களுக்கென தனி இருக்கைகள், தனி சீருடைகள் வழங்கப்பட்டு வந்தன. கிராமப் புறங்களில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில், இடைநிலை ஆசிரியர்கள் மழலையர் வகுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டனர். ஆனால் மீண்டும் மழலையர் வகுப்புகளில் பணியாற்றி வந்த ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கே மீண்டும் பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதன் பின்னர், எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகள் குறித்த முறையான வரையறைகள் வெளியாகவில்லை.
இதனால், அரசுப் பள்ளிகளில் மழலையர் மாணவர் சேர்க்கை குறித்துப் பள்ளிக் கல்வித்துறை தெளிவுபடுத்தக் கோரிக்கை எழுந்தது. இதற்கிடையில், அரசுப் பள்ளிகளில் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட எல்கேஜி, யூகேஜி ஆகிய மழலையர் வகுப்புகள் மூடப்படுவதாகத் தகவல் வெளியானது. தொடக்கக் கல்வித்துறையில் ஏற்கெனவே ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் நிலையில், தற்போது ஆசிரியர்களை 1ஆம் வகுப்பு முதல் பாடம் கற்பிக்கப் பயன்படுத்திக்கொள்ள பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அரசு மீண்டும் அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்படும் என்று அறிவித்தது.
இந்நிலையில் 2,381 அங்கன்வாடி மையங்களில், எல்கேஜி, யுகேஜி ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடக்கக் கல்வியில் டிப்ளமோ முடித்தவர்களை பள்ளி மேலாண்மைக் குழு வாயிலாக நியமனம் செய்துகொள்ளவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பணியாற்றுவர். அதேபோல ஜூன் மாதம் மூலம் ஏப்ரல் மாதம் வரை 11 மாதங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் பணியில் இருப்பர்.
சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.13.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் குறித்த அறிவுறுத்தல்களை அரசு முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, தொடக்கக் கல்வி இயக்குநர், பள்ளிக் கல்வித்துறை ஆணையர், சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சகம் உள்ளிட்டவற்றுக்கு வழங்கியுள்ளார்.