Governor RN Ravi: பல்கலைக்கழகங்களில் நிரந்தர பதிவாளரை நியமிக்க வேண்டும் - ஆளுநர் அறிக்கை..!
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிரந்தரப் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் நியமிக்க வேண்டும் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் நிரந்தரப் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர்கள் நியமிக்க வேண்டும் என ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இன்று அதாவது ஜூலை 4ஆம் தேதி சென்னை பல்கலைக் கழக நிர்வாக அமைப்புகளுடன் ஆளுநர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகக் குழுக்களின் சார்பில், பல்கலைக் கழகத்தில் நிரந்தர பதிவாளர் மற்றும் நிரந்தர தேர்வுக் கட்டுப்பாட்டாளர் மற்றும் துறை வாரியாக நிரப்பப்படாமல் உள்ள பேராசியர்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த கூட்டத்தில், நிர்வாக கூட்டங்கள் அதாவது சிண்டிகேட் மற்றும் செனட் கூட்டங்கள் பல்கலைக்கழகத்துக்கு பதிலாக தலைமைச் செயலகத்தில் நடைபெறுவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், ஆளுநர் மாளிகை சார்பில் வெளியிடப்பட்டுள்ள, அறிக்கையில், “ தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் நிரப்பப்படாமல் உள்ள நிரந்தர துணை வேந்தர்களையும், நிரந்தர பதிவாளர்களையும், நிரந்த தேர்வுக்கட்டுப்பாட்டாளர்களையும் நியமிக்க வேண்டும், பணியிடங்கள் காலியா இருப்பதால் பணியில் சுணக்கம் ஏற்படுகிறது, எனவே விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், நிரப்பப்படாமல் உள்ள பேராசிரியர்கள் இடங்களையும் நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான பல்கலைக் கழகங்களில் பேராசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான தேவை உள்ளது அவற்றையும் நிரப்ப வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.