Incentives for students: மாணவர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊக்கத்தொகை.! அசத்தல் திட்டத்தை தொடங்கிய தமிழக அரசு
Incentives for students: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழக அரசின் கல்விக்கான திட்டங்கள்
தமிழக அரசு கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் கல்வி உதவித்தொகை, காலை உணவு திட்டம், இலவச மிதி வண்டி, இலவச பேருந்து பயண அட்டை என பல திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக மாதம் ரூ.10,000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள சமூக திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல், நோக்கத்தோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருக்கோயில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள். பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்களுக்கான உறைவிடங்கள், மனநலக் காப்பகம், மருத்துவ மையங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.
அறநிலையத்துறை பயிற்சிப் பள்ளி
திருக்கோயில்கள் சார்பில் 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள். 6 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள், 2 வேத ஆகம் பாடசாலைகள். ஒரு திவ்ய பிரபந்த பாடசாலை என 18 பயிற்சிப் பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு உணவு, உடை, உறைவிடத்துடன் மாதந்தோறும் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 2025- 2026 ஆம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், "அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் முழுநேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2022-ஆம் ஆண்டு வரை ரூ.1,000/- வழங்கப்பட்டு வந்தது.
2023-ஆம் ஆண்டு முதல் ரூ.3,000/-ஆகவும், 2024 ஆண்டு முதல் ரூ.4,000/-ஆகவும் உயர்த்தி வழங்கப்பட்டது. இந்த ஆண்டு முதல் ரூ.10,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைத்து பயிற்சிப் பள்ளிகளில் பகுதி நேர வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக 2023-ஆம் ஆண்டு முதல் ரூ.1,500/- ஆக வழங்கப்பட்டு வந்ததை. 2024-ஆம் ஆண்டு முதல் ரூ.2,000/-ஆக வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் ரூ.5,000/- ஆக உயர்த்தி வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டது.
மாதம் 10,000 ரூபாய் ஊக்கத்தொகை
இந்த அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர். ஓதுவார். தவில் மற்றும் நாதஸ்வரம், திவ்ய பிரபந்த பாடசாலை மற்றும் வேத ஆகம பாடசாலை ஆகிய 18 பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.10,000/- மற்றும் பகுதி நேரமாக பயிற்சி பெறும் மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை ரூ.5,000/- க்கான வங்கி வரைவோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர் இன்று வழங்கினார். இதன்மூலம் பயிற்சிப் பள்ளிகளில் முழு நேரமாக பயிற்சி பெறும் 297 மாணவர்கள், பகுதி நேரமாக பயிற்சி பெறும் 66 மாணவர்கள் என மொத்தம் 363 மாணவர்கள் பயன்பெறுவர் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.






















