Engineering Counselling: தொடங்கியது பொறியியல் கலந்தாய்வு: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இன்று சிறப்பு இட ஒதுக்கீடு! முழு விவரம்
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கியுள்ள நிலையில், முதல் நாளில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலைப் படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. இந்த கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 22) தொடங்கி உள்ளது.
இணைய வழியில் கலந்தாய்வு
சிறப்புப் பிரிவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கலந்தாய்வு நடைபெறத் தொடங்கியுள்ளது. இதில் பங்கேற்க விளையாட்டு பிரிவில் 226 மாணவர்களும், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு 9 மாணவர்களும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 26 பேரும் தகுதி பெற்று இருந்தனர். விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 11 இடங்கள், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் என மூன்று பிரிவிலும் சேர்த்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சிறப்பு பிரிவில் மொத்தம் 628 இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் பொறியியல் படிப்பில் சேர 31,445 அரசுப் பள்ளி மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 28, 425 மாணவர்கள் தகுதி வாய்ந்தவர்களாக அறியப்பட்டுள்ளனர். இதில் 27,886 பேர் பொதுப் பிரிவினர். 559 பேர் தொழில் கல்வி பயின்ற மாணவர்கள் ஆவர்.
இணைய வழியில் கலந்தாய்வு நடைபெற்று வருவதால், மாணவர்கள் வீடுகளில் இருந்தும், அரசு அமைத்துள்ள மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் (TFC centres) மூலமாகவும் கலந்தாய்வில் பங்கேற்று வருகின்றனர்.
3 கட்டங்களாக கலந்தாய்வு
நடப்பாண்டு ஆண்டு பொறியியல் படிப்புகளில் 1,57,378 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 3,100 இடங்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகமாக உள்ளன. 11,804 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் இருந்து படித்து, பொறியியல் கலந்தாய்வில் இடம்பெற உள்ளனர். அங்கீகாரம் பெற்ற 430 அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையை நடத்த உள்ளன.
சிறப்புப் பிரிவுக்கு 1, பொதுப் பிரிவுக்கு 2 என மொத்தம் 3 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலி இடங்கள் இருந்தால், அவற்றை நிரப்பக் கூடுதலாக ஒரு கலந்தாய்வு நடத்தப்படவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இவர்களுக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இணையதள வாயிலாக நடைபெறும் துணைக் கலந்தாய்வு செப்டம்பர் 6 முதல் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
நேரடியாக சான்றிதழ் சரிபார்ப்பு
சிறப்புப் பிரிவு கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு சென்னையில் நேரடியாக நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு 28ஆம் தேதி தொடங்க உள்ளது.
ஒதுக்கீட்டு ஆணை எப்போது?
காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவும், அன்று இரவே தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, நாளை பிற்பகல் 3 மணிக்குள் அதனை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறு உறுதி செய்பவர்களுக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை அன்றைய தினம் மாலை 6 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.