TN 2023 NEET Data: அதிகரித்த அரசுப்பள்ளி மாணவர்கள் நீட் தேர்ச்சி விகிதம்; சேலத்தில்தான் அதிகம்- முழு விவரம் இதோ!
2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள விவரம் வெளியாகி உள்ளது. இதன்படி, 31 சதவீத அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ள விவரம் வெளியாகி உள்ளது. இதன்படி, 31 சதவீத அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினர். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, திருச்சி, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்வு எழுதினர்.
இந்த நிலையில் நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் மே 13ஆம் தேதி வெளியிடப்பட்டன. இதில் அகில இந்திய அளவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 99.99% பெற்று முதலிடம் பிடித்தார். முதல் பத்து இடங்களில் 4 இடங்களை தமிழ்நாடு மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.
தமிழ்நாடு புள்ளிவிவரம்
இந்த நிலையில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விவரங்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வை அரசுப் பள்ளி மாணவர்கள் 12,997 பேர் எழுதினர். அதில் 3,982 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 30.67 சதவீத அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகம் ஆகும். சென்ற ஆண்டு 14,979 மாணவர்கள் நீட் தேர்வெழுதியதில் 4,118 (27%) பேர் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்களின் விவரங்களும் வெளியாகி உள்ளன. அதன்படி, 4 மாணவர்கள் 600-க்கும் மேல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 23 மாணவர்கள் 501 முதல் 600 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். 127 மாணவர்கள் 401 முதல் 500 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். அதேபோல 301 முதல் 400 வரையான மதிப்பெண்களைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 437 ஆக உள்ளது.
201 முதல் 300 வரையான மதிப்பெண்களைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 651 ஆக உள்ளது. மேலும் 2,740 மாணவர்கள் 107 முதல் 200 வரையிலான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
மாவட்ட அளவிலான தேர்ச்சி எப்படி?
மாவட்ட அளவிலான தேர்ச்சியில் அதிகபட்சமாக சேலத்தில் 519 பேர் நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். சேலத்தில் இருந்து 2007 பேர் அதிகபட்சமாக விண்ணப்பித்து இருந்தனர். கிருஷ்ணகிரியில் 235 பேர் நீட் தேர்வில் வென்றுள்ளனர். ஈரோடு, கள்ளக்குறிச்சியில் தலா 209 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல தென்காசி மாட்டத்தில் 335 பேர் நீட் தேர்வை எழுதிய நிலையில், குறைந்தபட்சமாக 9 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தேர்ச்சி விகிதம்
2023ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் தேசிய அளவில் 56 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்ற நிலையில், தமிழக அளவில் 54 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதுவே அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 31 சதவீதமாக உள்ளது. இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் அதிகம் ஆகும்.
2018ஆம் ஆண்டில் 22 சதவீதம் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2019ஆம் ஆண்டில், 13 சதவீதம் பேர் மட்டுமே அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2020ஆம் ஆண்டில், 26 சதவீதம் பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற நிலையில், 2021ஆம் ஆண்டில், 24 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். 2022ஆம் ஆண்டில், 27 சதவீதம் பேர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டு 461 பேர் எம்பிபிஎஸ் படிப்பிலும் 106 பேர் பிடிஎஸ் படிப்பிலும் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.