(Source: ECI/ABP News/ABP Majha)
12th Exam Absent: அதிர்ச்சி... பிளஸ் 2 முக்கியத் தேர்வில் மீண்டும் 47 ஆயிரம் பேர் ஆப்சென்ட்- பள்ளிக் கல்வித்துறை தகவல்
பிளஸ் 2 இயற்பியல் பாடப் பொதுத் தேர்வை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
பிளஸ் 2 இயற்பியல் பாடப் பொதுத் தேர்வை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
மாநிலம் முழுவதும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. 12ஆம் வகுப்புத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள் 23,747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்தனர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக இருந்தது.
இந்த மாணவர்களுக்கு மொத்தம் 3,225 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. இவர்களைக் கண்காணிக்க 46,870 அறைக் கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 3,100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. சென்னையில் 405 பள்ளிகளில் இருந்து 180 தேர்வு மையங்களில் மொத்தம் 45, 982 பேர் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுத விண்ணப்பித்தனர்.
இவர்களுக்கு காலை 10 மணிக்குத் தேர்வு தொடங்கியது. 10 மணி முதல் 10.10 வரை வினாத் தாளை வாசிக்க நேரம் அளிக்கப்பட்டது. 10.10 முதல் 10.15 வரை தேர்வரின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டது. அதை அடுத்து 10.15 முதல் 01.15 வரை 3 மணி நேரங்களுக்குத் தேர்வு நடைபெற்ற. மாணவர்கள் சீருடை அணிந்து உரிய நேரத்துக்குத் தேர்வு மையத்துக்குச் சென்றனர்.
இந்த நிலையில் தமிழ் மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இது பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அதேபோல 45 ஆயிரம் பேர் ஆங்கிலப் பாடத் தேர்வை எழுத வரவில்லை.
இந்த நிலையில் நேற்று (மார்ச் 21) இயற்பியல், பொருளியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற்றன. இந்தத் தேர்வுகளை 47 ஆயிரம் பேர் எழுதாததாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்முறைப் படிப்புகளுக்கு முக்கியமாகத் தேவைப்படும் இயற்பியல் உள்ளிட்ட முக்கியப் பாடத் தேர்வையே மாணவர்கள் எழுதாதது அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அரசு நடவடிக்கை என்ன?
மொழிப்பாடத் தேர்வில் மாணவர்கள் கலந்துகொள்ளாதது குறித்து அரசு சார்பில் நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை செயலாளர், ஆணையர், தனியார் பள்ளிகள் இயக்குநர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டம் முடிவடைந்த பிறகு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறும்போது, ''தேர்வு அன்றாத மாணவர்களின் விவரத்தைக் கேட்டறிந்து, அதற்கான காரணத்தை தேர்வு நாளன்றே தனியே பொறுப்பாளர் நியமிக்கப்படுவார். அவர் மாணவரின் பெற்றோரைப் பிற்பகலில் சந்தித்துப் பேசுவார்.
மாணவர்கள் தேர்வுக்கு வராமல் இருக்க, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் ஒவ்வொரு காரணம் உள்ளது. வேலைக்காக இடம் பெயர்தல், பயம் உள்ளிட்ட காரணங்களால் மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளவில்லை. கொரோனாவால் ஆல் பாஸ் செய்யப்பட்ட நிலையில், பொதுத் தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் பயப்படலாம். மார்ச் 24ஆம் தேதி பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட உள்ளது'' என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.