இன்று முதல் 10, 11ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்; நாளை முதல் விடைத்தாள் நகல்- எங்கே, எப்படி வாங்கலாம்?
TN 10th 11th Exam 2025 mark sheet: பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்கள் தங்களது விடைத்தாள் நகல் கோரி (copy of Answer sheets) விண்ணப்பிக்கலாம்.

10, 11ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இன்று (மே 19) பிற்பகல் 2 மணி முதல் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளது. மாணவர்கள் இணையத்தின் மூலமாகவே இதனைப் பெறலாம். அதேபோல நாளை முதல் விடைத்தாள் நகல் வழங்கப்பெற உள்ளது.
தமிழ்நாடு பள்ளிக் கல்வி வாரியத்தின்கீழ் 10, 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியாகின. இதில், 10ஆம் வகுப்பு மாணவர்கள் 93.80% தேர்ச்சி பெற்றனர். அதேபோல 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 5 முதல் 27ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வுகளை மொத்தம் 8,07,098 பேர் எழுதினர். 11,025 பேர் தேர்வை எழுதவில்லை. இதில், 7,43,232 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது 92.09 சதவீதம் தேர்ச்சி பதிவாகி உள்ளது. இதில் 4,03,949 மாணவிகளும் 3,39,283 மாணவர்களும் அடங்குவர்.
இவர்களுக்கான மதிப்பெண் பட்டியல், விடைத்தாள் நகல் ஆகியவை வெளியிடப்படும் தேதி குறித்த விவரத்தை, அதே நாளிலேயே அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டது.
அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
இதன்படி, 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று (மே 19ஆம் தேதி) முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. மே 20 முதல் விடைத்தாள் கோரி விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணாக்கர்களுக்கு மேல்நிலைக் கல்விக்கு விண்ணப்பிக்கத் தேவையான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (Provisional Certificate) மற்றும் மேல்நிலை முதலாமாண்டு (+1) மாணாக்கர்களுக்கு மதிப்பெண் பட்டியல் (Statement of Marks) ஆகியவற்றை 19.05.2025 பிற்பகல் 2 மணி முதல் பெறலாம். இவற்றை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டியது முக்கியம்.
விடைத்தாள் நகல் எப்போது கிடைக்கும்?
மதிப்பெண்களில் அதிருப்தி உள்ள மாணவர்கள், தங்களின் விடைத் தாளை சரிபார்க்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கர்கள் தங்களது விடைத்தாள் நகல் கோரி (copy of Answer sheets) விண்ணப்பிக்கலாம். குறிப்பாக, 20.05.2025 முதல் 24.05.2025 வரை தாங்கள் பயின்ற பள்ளியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
துணைத் தேர்வு எப்போது?
தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணாக்கர்களின் எதிர்கால நலன் கருதி பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணைத் தேர்வுகள் 04.07.2025 முதல் நடைபெற உள்ளன.
துணைத் தேர்விற்கு பள்ளி மாணாக்கர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகள் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோல தனித் தேர்வர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் விண்ணப்பிக்க வேண்டும்.
எப்போது?
பள்ளி மாணவர்களும் தனித் தேர்வர்களும் 22.05.2025 முதல் 06.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: https://www.dge.tn.gov.in/






















