TTSE Exam: இந்த ஆசிரியர்களுக்கு அனுமதியில்லை: தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு- முக்கிய உத்தரவுகள் பிறப்பிப்பு
தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களை தேர்வறை கண்காணிப்பாளராக நியமித்தல் கூடாது.
தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு அக்.15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், முதன்மை கண்காணிப்பாளர்களுக்கும் தேர்வு அறை கண்காணிப்பாளர்களுக்கும் முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
அரசுத் தேர்வுகள் இயக்குநர் சேதுராம வர்மா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
’’தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு 15.10.2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. தேர்வு காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெறும். தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டும் தேர்வர்களைத் தேர்வு மையத்தினை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கக் கூடாது.
1. தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தங்கள் மையத்திற்கான பெயர்ப் பட்டியல், தேவையான வினாத்தாள் மற்றும் விடைத்தாட்கள் பெறப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
2. தமிழ் மொழிப்பாட ஆசிரியர்களை தேர்வறை கண்காணிப்பாளராக நியமித்தல் கூடாது.
3. ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத எற்பாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாள் மற்றும் விடைத்தாட்கள் மட்டுமே வழங்கப்படும். எனவே, எக்காரணம் கொண்டும் 20 மாணவர்களுக்கு மேல் ஒரு தேர்வறையில் அமர அனுமதிக்கக்கூடாது. (கடைசி அறை தவிர)
4. வினாத்தாள் கட்டுக்களை தேர்வு மையத்தில் காலை 8.45 மணிக்குள் சென்றடையும் வண்ணம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வழித்தட அலுவலர்கள் பெற்று சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் / துறை அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
5. வழித்தட அலுவலர்கள் முதலில் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சென்று வினாத்தாள் கட்டுகளை பெற்று காலை 8.45 மணிக்குள் தேர்வு மையத்திற்கு சென்றடைய அறிவுறுத்த வேண்டும்.
6. தேர்விற்கான வினாத்தாள் தேர்வு துவங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9.45 மணிக்கு பிரிக்கப்பட்டு முறையே காலை 10.00 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டும்.
7. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு உள்ள தேர்வர்கள் மற்றும் பெயர் பட்டியலில் பெயர் உள்ள தேர்வர்களை மட்டும் தேர்விற்கு அனுமதிக்கப்பட வேண்டும். தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்பொருட்டு புறச்சரக எண்ணில் தேர்வழுத அனுமதி வழங்க வேவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
8. தேர்விற்கு வருகைபுரிந்த தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாளில் present P கருப்பு மையினால் நிழற்படுத்த வேண்டும். வருகைபுரியாத தேர்வர்களின் ஓஎம்ஆர் விடைத்தாளில் Absent A என கருப்புநிற பந்து முனை பேனாவினால் நிழற்படுத்த வேண்டும்.
9. மாணவர்களுக்கு வழங்கப்பட்ட OMR Answer Sheet அவர்களுடைய பதிவெண்ணிற்கு உரியவைதானா என்பதை உறுதி செய்து கொண்டு மாணவர் மற்றும் அறை கண்காணிப்பாளர் கையொப்பமிட வேண்டும்.
10. நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, அதே நுழைவுச்சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர் முத்திரையுடன் சான்றொப்பம் பெற வேண்டும்.
11. பெயர்ப்பட்டியலில் பெயர், தலைப்பெழுத்து, பிறந்த தேதி, இனம் ஆகியவற்றில் திருத்தம் ஏதேனும் ஒருப்பின் உரிய திருத்தம் செய்து சான்றொப்பமிட்டு, பெயர்பட்டியலின் இறுதியுள்ள Abstract-ஐ பூர்த்தி செய்து முதன்மைக் கண்காணிப்பாளரின் முத்திரை மற்றும் கையொப்பம் பெற்று ஓஎம்ஆர் விடைத்தாட்களுடன் தேர்வு நாளன்றே ஒப்படைக்க வேண்டும்.
12. தேர்வு தொடங்கிய 30 நிமிடத்திற்குள் தேர்வு மைய தேர்வர்களின் வருகை (Present) (Absent) விபரத்தை அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநருக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்.
13. தேர்வு முடிந்தவுடன் , வழித்தட அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து விடைத்தாள் / மீதமுள்ள வினாத்தாள் கட்டுக்களை பெற்று, முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் இணைந்து தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள மைய வாரியப் பட்டியலுடன் ஒப்பிட்டு சரிபார்த்துக்கொள்ள வேண்டும். முதன்மைக்
கல்வி அலுவலர்கள் விடைத்தாள்கட்டுகளை Logistics Lorry-ல் அனுப்பும் வரை உரிய பாதுகாப்பு வசதியுடன் வைத்துக்கொள்ள வேண்டும்’’.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.