Teachers Protest: மார்ச் 7-ல் கோட்டை முற்றுகை: டிட்டோஜேக் தொடக்கக் கல்வி ஆசிரியர் சங்கம் போராட்டம் அறிவிப்பு!
2025 மார்ச் 7-ல் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி 2025 மார்ச் 7-ல் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜாக் எனப்படும் தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் மாநிலப் பொதுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
- தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் களையப்பட்டு 01.01.2006 முதல் ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும்.
- தன் பங்கேற்பு ஒய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு பழைய ஒய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
- தொடக்கக் கல்வித்துறையில் 60 ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த ஒன்றிய முன்னுரிமையினை மாநில முன்னுரிமையாக மாற்றியமைத்து குறிப்பாகப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பினைப் பறிக்கும் வகையிலும், ஊட்டுப் பதவிகளில் மாற்றம் செய்து ஒரு லட்சம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வைப் பாதிக்கும் வகையிலும் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243 முற்றிலும் ரத்து செய்யப்பட வேண்டும்.
- முடக்கப்பட்ட ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமை, பறிக்கப்பட்ட உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவை மீண்டும் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி
2025 மார்ச் 7-ல் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
டிட்டோஜாக் பேரமைப்பின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் 28.12.2024 சனிக்கிழமை முற்பகல் 11 மணிக்கு சென்னையில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளருமான குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டன.
ஏமாற்றமே தொடர் கதை
தீர்மானம் எண்: 1
கடந்த 2023 செப்டம்பர் 30ல் டிட்டோஜாக் சார்பில் நடத்துவதாக அறிவிக்கப்பட்டு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களது அழைப்பின் பேரில் 23.09.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மீது பெரும் நம்பிக்கை கொண்டு பேரமைப்பு அறிவித்த போராட்டத்தை ஒத்திவைத்தது.
ஆனால் அந்நம்பிக்கையைச் சிதைக்கும் வகையில் தொடக்கக் கல்வித்துறை சார்பில் கோரிக்கைகளின் மீது இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகுந்த ஏமாற்றத்தையும், அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்பதை டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு ஏகமனதாகத் தெரிவித்துக் கொள்கிறது. பல பேச்சுவார்த்தைகளில் ஏமாற்றமே தொடர் கதையாகிவிட்ட சூழலில் தமிழ்நாட்டு ஆசிரியர்களின் கொந்தளிப்பான மனநிலையை தமிழ்நாடு அரசுக்கு வலிமையாக உணர்த்தும் வகையில் 23.09.2024 அன்று ஒத்திவைக்கப்பட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை பேரெழுச்சியுடன் 07.03.2025 அன்று நடத்துவதென டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 2
டிட்டோஜாக் பேரமைப்பின் 2025 மார்ச் 7 கோட்டை முற்றுகைப் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் டிட்டோஜாக் பேரமைப்பின் மாவட்ட, வட்டார நிர்வாகிகள் 04.01.2025 மற்றும் 05.01.2025 ஆகிய இரு நாட்கள் அந்தந்தப் பகுதியில் உள்ள அமைச்சர்கள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளிப்பதெனவும் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் 06.01.2025 முதல் 08.01.2025 முடிய 3 நாட்கள் சென்னையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து டிட்டோஜாக்கின் கோரிக்கை மனுக்களை அளிப்பதெனவும் பொதுக்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.
தீர்மானம் எண்: 3
2025 மார்ச் 7-ல் நடைபெறவுள்ள கோட்டை முற்றுகைப் போராட்டத்தை பேரெழுச்சியுடன் நடத்த ஏதுவாக 01.02.2025, 08.02.2025, 15.02.2025, 22.02.2025 ஆகிய தேதிகளில் கீழ்க்கண்டவாறு மண்டல அளவிலான போராட்ட ஆயத்தக் கூட்டங்களை நடத்திடவும்,
அக்கூட்டங்களில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்பதெனவும் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் எண்: 4
கல்வி உரிமைச் சட்டம் 2009ல் திருத்தம் மேற்கொண்டு 5 மற்றும் 6 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வந்த “அனைவருக்கும் தேர்ச்சி” என்ற நடைமுறையை கைவிடப் போவதாக அறிவித்துள்ள ஒன்றிய அரசின் முடிவுக்கு டிட்டோஜாக் மாநிலப் பொதுக்குழு தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் இம்முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் எனவும் டிட்டோஜேக் தெரிவித்துள்ளது.