ஆசிரியர்களே… கல்விச் சான்றிதழே ரத்து- பகிரங்க எச்சரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில்!
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்யவும் உத்தரவு.

ஆசிரியர்கள், ஊழியர்கள் மீதமான பாலியல் குற்றம் நிரூபணமானால் கல்விச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதேபோல, பள்ளிகளில், பாலியல் புகார் வந்தால் உடனே தலைமைக்குத் தெரிவிக்க வேண்டும். நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள், அலுவலர்கள் என 238 பேர் கொண்ட பட்டியலைத் தயார் செய்து, அவர்கள் மீதான விசாரணையை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தி உள்ளார்.
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகக் கூட்ட அரங்கில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் பள்ளிக் கல்வித் துறையின் முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது அவர் கூறியதாவது:
''போக்சோ தொடர்பாகவும் மாணவர்கள் பிரச்சனை குறித்தும் கூட்டத்தில் பேசி உள்ளோம். போக்சோ சம்பந்தமாக மாணவர் மனசு பெட்டி, 14417 எண் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு யாருக்கும் அச்சம் இல்லாமல் தொடர்ந்து, எங்கெல்லாம் தவறு நடக்கின்றதோ புகார்கள் பெறப்படுகின்றன.
புகார் வந்தால் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும், துரிதமாக எப்படி செயல்பட வேண்டும்? அதன் பின்பு காவல்துறை பக்கம் வழக்கு சென்றுவிடும், அவர்கள் என்ன செய்யப் போகின்றார்கள்? பள்ளிக் கல்வித்துறையில் நாம் என்ன கால தாமதம் இல்லாமல் செய்யலாம் என விரிவாக பேசியுள்ளோம்.
போக்சோ புகார்கள் தொடர்பாக வரைவறிக்கை
போக்சோ புகார்கள் தொடர்பாக முதலமைச்சர் ஒரு வரைவு அறிக்கை தயாரிக்கச் சொல்லி இருக்கின்றார். மூன்று-நான்கு நாட்களில் வரைவு வெளியிடப்படும். அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அது அனுப்பப்படும்.
இனி புகார்கள் வராத வண்ணம் எப்படி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பேசியுள்ளோம். ஜூன் கல்வி ஆண்டு வரும்பொழுது NGO-க்கள் மூலமாகவும், காவல்துறை மூலமாகவும், சமூக நலத்துறை மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.
இதுவரை நிலுவையில் 238 வழக்குகள் உள்ளன. 11 பேர் குற்றமில்லை என்று நிரூபிக்கப்பட்டு மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டு இருக்கின்றார்கள். ஏழு பேர் இறந்திருக்கின்றார்கள். மார்ச் 10ம் தேதி 56 பேருக்கு தீர்ப்பு வர இருக்கின்றது.
யாரும் பயப்பட தேவையில்லை
எந்தெந்த புகார் வந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். யாரும் பயப்பட தேவையில்லை. உங்களுக்கான உதவி செய்ய வேண்டியது அரசின் கடமை’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.






















