Teachers Protest: போராட்டம் அறிவித்த ஆசிரிய சங்கங்கள்.. உடனடியாக பேச்சுவார்த்தைக்கு அழைத்த தமிழ்நாடு அரசு - நடப்பது என்ன?
Teachers Protest: போராட்டம் அறிவித்த ஆசிரியர் அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
Teachers Protest: போராட்டம் அறிவித்த ஆசிரியர் அமைப்புகளுடன், புதன்கிழமை ( நாளை மறுநாள்) அன்று பேச்சுவார்த்தை நடத்த பள்ளிக்கல்வித்துறை அழைப்பு விடுத்துள்ளது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு:
இதுதொடர்பான அறிவிப்பில், “தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 01.06.2009-க்கு பின் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்கள் 01.06.2009-க்கு முன் இடைநிலை ஆசிரியர் பணியில் நியமனம் பெற்றவர்களுக்கு இணையான ஊதியம் கோரும் கோரிக்கை சார்பாக ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி சம வேலைக்கு சம ஊதியம் குறித்த கோரிக்கை சார்பாக மேற்கண்டுள்ள குழுவின் தலைவரான அரசு நிதித் துறை செயலாளர் (செலவினம்) தலைமையில் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரின் முன்னிலையில் பார்வை 5-ல் காணும் அரசுக் கடிதத்தின்படி 01.11.2023 அன்று பிற்பகல் 03.30 நடைபெறவுள்ள கூட்டத்திற்கு ஐந்து மணியளவில் குறிப்பிட்ட சங்க பிரதிநிதிகள் கலந்துகொள்ள அழைக்கப்படுகிறார்கள். மேலும் இக்கூட்டத்திற்கு ஒரு சங்கத்திற்கு இரண்டு பிரதிநிதிகளுக்கு மிகாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தை எங்கே?
அதன்படி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசியர் கூட்டணி, தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்கம், தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழ்நாடு துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கம் ஆகிய 5 அமைப்புகளுக்கு, இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையானது சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், 6வது தளத்தில் அமைந்துள்ள பள்ளிக்கல்வித்துறை கூட்டரங்களில் இந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 கட்ட போராட்டம்:
பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 10 கோரிக்கைகளைப் பட்டியலிட்டு, உடனடியாக நிறைவேற்ற வேண்டும், இல்லையெனில் நவம்பர் 1 முதல் நான்கு கட்டங்களாக தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. இந்தியாவில் நான்கு மாநிலங்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு திரும்புவதாக தெரிவித்த பிறகும்கூட பழைய ஓய்வூதியத்திட்டத்தை தேர்தல் அறிக்கையில் சொன்னபடி அமல்படுத்தாமல் இருப்பது ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும், பணியாளர்களையும் பெருத்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
முதல்வரின் வாக்குறுதிகள் மீதான நம்பிக்கைகள் மெல்லத் தகர்ந்து வரும் சூழ்நிலையில் நாங்கள் எங்கள் வாழ்வாதார கோரிக்கைகளை ஜனநாயகம் அனுமதித்துள்ள போராட்டங்கள் மூலம் வென்றெடுக்க வேண்டிய முன்னெடுப்பை மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். ஜாக்டோ ஜியோ அமைப்பின் போராட்டக்குழு அறிவித்துள்ள இயக்கங்களை நடத்திடுவதற்கு நாங்கள் ஆயத்தமாகி வருகிறோம்.
நவம்பர் 1 மாவட்டத் தலைநகரங்களில் மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். நவம்பர் 15 முதல் நவம்பர் 24 வரை ஆசிரியர் -அரசு ஊழியர் - அரசுப் பணியாளர் சந்திப்பு போராட்ட பிரச்சார இயக்கம். நவம்பர் 25 மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம். டிசம்பர் 28 லட்சக்கணக்கான ஆசிரியா-அரசு ஊழியா்- அரசுப்பணியாளர் பங்கேற்கும் கோட்டை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.