Polytechnic Admission: காலேஜ் சீட் கிடைக்கலைன்னு கவலையா? பாலிடெக்னிக் சேர விண்ணப்பிக்கலாம்- அவகாசம் நீட்டிப்பு
Polytechnic Colleges Admission 2025: பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவுக்கு விண்ணப்ப அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் அவகாசம் கால வரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணைய வழியாக நடத்தப்படும் முன்பதிவு கால வரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 56 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. அதேபோல 32 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 350-க்கும் அதிகமான தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் டிப்ளமோ பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப் பட்டயப் படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் சேர சுமார் 20 ஆயிரம் அரசு இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகளின் இடங்களையும் சேர்த்து மொத்தம் ஒன்றரை லட்சம் இடங்கள் உள்ளன.
கால வரையறை இல்லாமல் நீட்டிப்பு
இந்த நிலையில் இவற்றுக்கான விண்ணப்பப் பதிவு பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான அன்றே தொடங்கியது. மே 7ஆம் தேதி தொடங்கிய விண்ணப்பப் பதிவுக்கு விண்ணப்ப அவகாசம் முடிந்த நிலையில் மீண்டும் அவகாசம் கால வரையறை இல்லாமல் நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைவான அளவிலேயே மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு நடந்துள்ளதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு, பஸ் பாஸ், உதவித் தொகை, கல்வி உபகரணங்கள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
பதிவுக்கட்டணம்
பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர பதிவுக் கட்டணமான ரூ.150/-ஐ விண்ணப்பதாரர் Debit Card / Credit Card / Net Banking ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றின்மூலம் இணையதள வாயிலாகச் செலுத்த வேண்டும். எனினும் எஸ்சி/ எஸ்டி பிரிவினர் பதிவுக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை. முதலாம் ஆண்டு, பகுதி நேர பட்டயப் படிப்பில் சேர மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
https://tnpoly.in/6CBA23F3481231F0992144E61EC2A740B4E2752A-rglr99838502224527368/login என்ற இணைப்பை க்ளிக் செய்து, விண்ணப்பிக்க வேண்டியது முக்கியம்.
முதல்முறையாக விண்ணப்பிப்பவர்கள் https://tnpoly.in/registration என்ற இணைப்பில் முன்பதிவு செய்துகொள்ள வேண்டியது அவசியம்.
கூடுதல் விவரங்களுக்கு: 9150486098, 9150496098 , 7418312307
இ மெயில் முகவரி: tnpadote@gmail.com






















