(Source: ECI/ABP News/ABP Majha)
சிஏ படிப்பவரா நீங்கள்! அரசு தருகிறது இலவச கோச்சிங் - தகுதிகள் என்ன? எப்படி விண்ணப்பிப்பது?
பட்டய கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு அரசு சார்பில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆதிதிராவிட சமுதாய மக்களின் வளர்ச்சிக்காகவும் தாட்கோ சார்பில் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ( தாட்கோ) சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பட்டய கணக்காளருக்கு பயிற்சி:
பட்டய கணக்காளர் – இடைநிலை, நிறுவனச் செயலாளர் – இடைநிலை, செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் – இடைநிலை ஆகிய போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற தாட்கோவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ள அனைத்து முன்னணி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
இதில் பங்கேற்க தகுதிகள்:
இந்த பயிற்சி வகுப்பில் சேர்வதற்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினராக இருக்க வேண்டும்.
இளநிலை வணிகவியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப வருமானம் ரூபாய் 3 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும்.
இந்த பயிற்சியின் கீழ் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு ஒரு வருட பயிற்சி அளிக்கப்படும். அந்த பயிற்சியின்போது மாணவர்களுக்குத் தேவையான தங்கும் வசதி மற்றும் உணவு வசதிகள் தாட்கோ மூலம் ஏற்பாடு செய்யப்படும்.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விரும்பும் தகுதியுள்ள மாணவர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com மூலம் பதிவு செய்ய வேண்டும்.