TN School Reopen: தமிழகத்தில் நாளை பள்ளிகள் திறப்பு; முன்னேற்பாடுகள் தீவிரம்!
Tamil Nadu School Reopen 2024: அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் நாளை (ஜூன் 10) திங்கள் கிழமை அன்று திறக்கப்பட உள்ளன.
கோடை விடுமுறைக்குப் பிறகு நாளை மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழ்நாட்டில் மாநிலக் கல்வி வாரியத்தின்கீழ் செயல்படும் அரசு, தனியார் பள்ளிகளுக்கு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்திருந்தார். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் வெயில் முன்னெப்போதும் இல்லாத அளவு, மார்ச் மாதத்திலேயே வெயில் சுட்டெரித்தது. எனினும் கோடை மழை பெய்ததால், நிலம் சற்றே குளிர்ந்தது. ஆனால் மீண்டும் வெயில் கொளுத்தியது.
வெயிலால் உயிரிழந்த மாணவர்
சென்னையில், 107 டிகிரி வெயில் கொளுத்திய நிலையில், திருத்தணியில் அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் பதிவானது. இதற்கிடையே சென்னையில், வெயிலின் தாக்கத்தால் 12ஆம் வகுப்பு மாணவன் மே 31ஆம் தேதி அன்று மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இதையடுத்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு முஸ்லீம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா ஆகியோர் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருந்தனர்.
நாளை பள்ளிகள் திறப்பு
இதைத் தொடர்ந்து கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு அறிவிப்பு வெளியானது. அதாவது, ஜூன் 10ஆம் தேதிக்கு பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டதாகப் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி அறிவித்தார். இந்த நிலையில் தற்போது, அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் நாளை (ஜூன் 10) திங்கள் கிழமை அன்று திறக்கப்பட உள்ளன.
இதையடுத்து வகுப்பறைகள் சுத்தப்படுத்துவது, கழிப்பறைகள், விளையாட்டு மைதானம் ஆகிய பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பள்ளிகள் திறக்கப்பட்ட உடனேயே பாடப் புத்தகங்களை விநியோகிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. நாளை இனிப்பு பொங்கலும் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இதற்கிடையே 2024- 25ஆம் கல்வி ஆண்டுக்கான வருடாந்திர நாட்காட்டி நேற்று வெளியிடப்பட்டது. இதில் 220 வேலை நாட்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டும் ஒத்திவைப்பு
முன்னதாக, கடந்த 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் பள்ளிகள் ஜூன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதும் தமிழ்நாட்டில் கடுமையான வெப்ப அலை வீசியதைத் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு முதலில் ஜூன் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக, ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாம்: Group 4 Exam: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்படி இருந்தது?- கட் ஆஃப் குறையுமா? தேர்வர்கள் என்ன சொல்கிறார்கள்?