Microsoft TEALS Program: மைக்ரோசாஃப்ட் உடன் கைகோத்த பள்ளிக்கல்வித்துறை: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு TEALS திட்டம்- என்ன அம்சங்கள்?
இந்தியாவிலேயே முதல் முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவிலேயே முதல் முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது:
’’இந்தியாவிலேயே முதல் முறையாக கல்வி மேம்பாட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TEALS (Tecnical Education And Learning Support) எனும் திட்டத்தை செயல்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. தமிழ்நாட்டின் கிராம பகுதிகளைச் சேர்ந்த மாணவச் செல்வங்களுக்கு அனைத்து தொழில்நுட்பம் சார்ந்த புரிதலும் சென்றடைய TEALS திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சர் ஸ்டாலின் வானவில் மன்றம் திட்டத்தின் வாயிலாக STEM முயற்சியை தொடங்கி வைத்தார். மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவிக்கும் விதமாக 710 கருத்தாளர்களின் உதவியோடு மாணவர்களின் அறிவியல் திறன்கள் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன. இதன் அடுத்த கட்டமாக Robotics, Artificial Intelligence, Machine learning போன்ற தொழில்நுட்பங்கள் நமது கிராமப்புற மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்னும் நோக்கில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வரலாற்று சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
TEALS எனும் திட்டத்தை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து தங்கள் மாநிலங்களில் செயல்படுத்த வேண்டுமென இந்தியாவில் உள்ள பல மாநிலங்களும் போட்டியிட்டன. ஆனால் தமிழ்நாடு முதலமைச்சர் தந்த ஆக்கத்தினாலும், ஊக்கத்தினாலும் தமிழ்நாடு மாநிலம் முதன்முறையாக மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நவீன தமிழ்நாட்டின் தந்தை முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவில் இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தமிழர்களாகிய நமக்கு கிடைத்த பெருமையாகும்.
13 பள்ளிகள் தேர்வு
முதல்கட்டமாக 13 பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு 3800 மாணவர்கள் பயன்பெறும் வகையில் TEALS திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மிக விரைவில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தலைமையில் மைக்ரோசாப்ட் இயக்குனர்கள் பங்குபெறும் TEALS திட்டத் தொடக்க விழா தமிழ்நாட்டில் நடைபெற இருக்கின்றது.
இத்திட்டம் அனைவராலும் பாராட்டப்படும் என மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
இதற்கு உறுதுணையாக விளங்கிய மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரான சிசில் சுந்தர்((Director Data & AI), தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, சுதன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றிகள்’’.
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்து இருந்தார்.
இந்த முன்னெடுப்பை முதல்வர் ஸ்டாலின் பாராட்டி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ’’அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமெரிக்கப் பயணத்தின்போது, ஊரகப் பகுதி மாணவர்களுக்கு உலகத்தரத்திலான தொழில்நுட்பக் கல்வி அறிமுகத்தை வழங்க மைக்ரோசாஃப்ட் உடன் இணைந்து
பள்ளிக் கல்வித்துறை மேற்கொள்ளும் முன்முயற்சிகளைப் பற்றி என்னிடம் தொலைபேசியில் தெரிவித்தார்.
தமிழர்களின் இதயத்துடிப்பான கல்வியை உலகத்தரத்திற்கு உயர்த்துவதே நமது திராவிட மாடல் அரசின் இலக்கு. அதற்கான பணிகளில் ஈடுபடும் அமைச்சருக்கும் அதிகாரிகளுக்கும் என்னுடைய பாராட்டுகள்!கல்வியில் சிறந்த தமிழரெனப் பார் போற்ற பாடுபடுவோம்’’ என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.