தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு இடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்பட உள்ள இடங்களின் விவரங்களை வரும் ஜூலை 3-ந் தேதி தனியார் பள்ளிகள் தங்களது இணையதளத்திலும், பள்ளி அறிவிப்பு பலகையிலும் வெளியிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,
“ குழந்தைகளுக்கான இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டப்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 சதவீத இடங்களில் சேர்க்க வேண்டுமென 2013ம் ஆண்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில், ஆண்டுதோறும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நிகழாண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தனியார் பள்ளிகள் இணைய வழியில் விண்ணப்பங்களை பெற்று, கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நுழைவு நிலை வகுப்புகளில் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான சேர்க்கையை நடத்த வேண்டும். தனியார் பள்ளிகளில் நுழைவு நிலை வகுப்பில் உள்ள இடங்கள் குறித்த விவரங்களை ஜூன் 24-ந் தேதி முதல் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் பெற வேண்டும். இதையடுத்து, 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட உள்ள எண்ணிக்கைகளின் விவரங்கள் தனியார் பள்ளிகள் அறிவிப்பு பலகையிலும் பள்ளிக்கல்வித்துறை அதன் இணையதளத்திலும் ஜூலை 3-ந் தேதி வெளியிட வேண்டும்.
இதைத்தொடர்ந்து குழந்தைகளைச் சேர்க்க விரும்பும் பெற்றோர்கள் வரும் ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டார கல்வி அலுவலர், அனைவருக்கும் கல்வி இயக்க வட்டார வள மைய அலுவலகங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இணையவழியில் விண்ணப்பிக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
அந்தந்த பள்ளிகளில் விண்ணப்பங்கள் ஏதேனும் வழங்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பெற்றோர்களுக்கு ஒப்புகை சீட்டு உடனடியாக தவறாமல் வழங்கப்பட வேண்டும். அந்த விண்ணப்பங்களை பள்ளியிலே இணையவழியில் பதிவேற்றம் செய்யலாம். அல்லது அருகில் உள்ள வட்டார, மாவட்ட கல்வி அலுவலகங்களில் கொடுத்து பதிவேற்றம் செய்யலாம்.
ஆகஸ்ட் 10-ஆம் தேதி பள்ளியில் உள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் உள்ள இடங்களை விட குறைவாக விண்ணப்பித்து இருந்தால் அவர்களைத் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும். இலவச கட்டாயக்கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விவரங்களை ஆகஸ்ட் 14-ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரியிடம் தனியார் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும்.
மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு மக்களிடையே சென்றடையும் வகையில் அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதிப் பள்ளிகளிலும், பள்ளியில் பிரதான நுழைவுவாயிலும் பொதுமக்களுக்கு நன்கு தெரியும் வகையில் பள்ளிப் பெயர்பலகைக்கு அருகிலும், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் கடந்தாண்டு வைக்கப்பட்டது போன்று அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும். விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான மாணவர்களின் விவரங்களை பள்ளிகள் தங்களது அறிவிப்பு பலகையிலும், பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்திலும் ஆகஸ்ட் 9-ஆம் தேதி வெளியிட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.