TN Open University: இந்தியாவிலேயே 2-ஆம் இடம்: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு ஏ+ தகுதி!
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசியத் தர உத்தரவாதக் கழகம் (NAAC) A+ தகுதியை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு தேசியத் தர உத்தரவாதக் கழகம் (NAAC) A+ தகுதியை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் 2002 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்ட ஒரு மாநிலத் திறந்தநிலைப் பல்கலைக்கழகமாகும். பல்கலைக்கழக நிதிநல்கை ஆணையத்தின்(யுஜிசி) 22F & 12B தகுதிநிலையைப் பெற்றது.
இதுகுறித்து தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழம் தெரிவித்து உள்ளதாவது:
''இந்திய அளவில் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முறையில் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவனங்களில் முதல் சுற்றிலேயே தேசியத் தர உத்தரவாத கழகத்தின் (NAAC) தர மதிப்பீட்டு புள்ளி (CGPA) நான்கிற்கு 3.32 புள்ளிகள் பெற்று A+ தகுதியைப் பெற்று, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஒரு புதிய சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் முதல் சுற்றிலேயே NAAC தரவரிசையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இதற்கான அறிவிப்பினை தேசியத்தர உத்திரவாதக் கழகம் (நாக்) வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் செயல்படும் 16 திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களில் தேசியத் தர உத்தரவாத கழகத்தின் தரவரிசைப் பட்டியலில் குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் திறந்தநிலைப் பல்கலைகழகத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பெற்றுள்ளது.
செயல்பாடுகள் மதிப்பீடு
திறந்தநிலைப் பல்கலைக்கழகங்களுக்கான நாக் விதிமுறைகளின்படி கற்றல்- கற்பித்தல், மதிப்பீடு, ஆராய்ச்சி, புத்தாக்கம், விரிவாக்கப் பணிகள், உள்கட்டமைப்புகள், கற்றல் வளங்கள், மாணாக்கர் உதவி மற்றும் முன்னேற்றம், கோரிக்கைகளுக்கான தீர்வுகள், தலைமைத்துவம் மற்றும் மேலாண்மை, நிறுவனம் சார் பெறுமதிகள், சிறப்புச் செயல்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஏழு அளவுகோல்களைக் கொண்டு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
மேற்கண்டவற்றின் அடிப்படையில் ஐந்துபேர் கொண்ட நாக் வல்லுநர் குழு கடந்த 19.07.2023 முதல் 21.07.2023 வரை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்து பல்கலைக்கழகத்தின் வளாகங்களில் செயல்படும் பல்வேறு கல்விப் புலங்கள், நிர்வாகப் பிரிவுகள், மையங்கள், பல்வேறு செயல்பாடுகளின் பொருட்டு அமைக்கப்பட்டுள்ள பிரிவுகள், சமுதாயக் கல்லூரிகள் ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தது.
21 ஆண்டுகால உழைப்புக்குக் கிடைத்த பரிசு
வல்லுநர் குழுவின் வருகையின்போது, தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஆறுமுகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் உள் தர உத்தரவாத மையத்தின் இயக்குநர் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தின் ஒட்டுமொத்த கல்வி சார் செயல்பாடுகள் குறித்து வல்லுநர் குழுவிற்கு எடுத்துரைத்தனர். 210 கற்போர் உதவி மையங்கள், 140 சமுதாயக் கல்லூரிகள் என்ற சிறப்பான உள்கட்டமைப்புகளைக் கொண்டு அனைவருக்கும் தரமான உயர்கல்வியை வழங்கும் பணியைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மேற்கொண்டு வருவதாக பதிவாளர் பேராசிரியர் பாலசுப்பிரமணியன் வல்லுநர் குழுவிற்கு எடுத்துரைத்தார்.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பின்தங்கிய பகுதிகளில் வாழும் பழங்குடியினர், திருநங்கைகள், சிறைவாழ்நர், சமூக ரீதியாக பின்தங்கிய பிரிவினர் ஆகியோருக்கு உயர்கல்வியை வழங்க எடுத்துவரும் முயற்சிகளுக்கு நாக் வல்லுநர் குழு பாராட்டுத் தெரிவித்தது.
இணையவழிப் படிப்புக்கு அனுமதி
நாக் தரவரிசை என்பது தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்ழகத்தின் 21 ஆண்டுகால கடின உழைப்பிற்குக் கிடைத்த பரிசாகும். தற்போது பதினோரு லட்சம் மாணாக்கர்கள் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பயனடைந்துள்ளனர். தேசியத் தர உத்தரவாத கழகத்தின் 3.32/ 4 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்றதன் மூலம் யுஜிசியின் அனுமதியோடு இணையவழியில் படிப்புகளை வழங்குவதற்கும் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தகுதிபெற்றுள்ளது. இதன்மூலம் திறந்தநிலை மற்றும் தொலைநிலைக் கல்வி முறையில் உயர்கல்வியை வழங்குவதில் மிகப் பெரிய பங்களிப்பைத் தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் வழங்க முடியும்''.
இவ்வாறு தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.