7.5 reservation | தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவு நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது
பொறியியல், வேளாண்மை, சட்டம், கால்நடை, மீன்வளம் போன்ற தொழில்முறை படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு 7.5% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டமுன்வடிவு நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவுள்ளது.
முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, "கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம்,சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.
அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப் போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுடிவடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டது" எனக் கூறப்பட்டது.
முன்னதாக, தமிழகத்தில் மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்தாண்டு அக்டோபர் மாதம் பிறப்பித்தது. இதுதொடர்பாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு தாமதமான நிலையில், அரசியல் சட்டத்தின் 162 ஆவது பிரிவின்கீழ், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த ஆணையை பிறப்பித்தார். இதன் மூலம், கடந்தாண்டு மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கையிலும் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படபட்டது.
தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்த சில நாட்களுக்குப் பிறகு, ஆளுநர் 7.5 இடஒதுக்கீடு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், " இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கருத்துக்காக ஆளுநர் காத்திருந்ததாகவும், அறிவுரை கிடைத்தவுடன் உடனடியாக ஒப்புதல் வழங்கினார்" என்றும் தெரிவிக்கப்பட்டது.
எனவே, நடப்புச் சட்டமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் சட்டமசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைக்க வேண்டும். ஆளுநர் ஒப்புதல் அளித்தால் மட்டுமே சட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
கொரோனா பெருந்தொற்று: கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடுமுழுவதும் பள்ளிகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஊரடங்கு காலத்தில் அரசுப்பள்ளி மாணவர்களின் கல்வி இழப்பு அதிகமாக இருந்தது. உதாரணமாக, தமிழ்நாட்டில் இணைய வசதி இல்லாத அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை 80% என பள்ளிக்கல்வித்துறையின் தரவுகள் தெரிவிக்கின்றன. எனவே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படுப்புகளில் இடஓதுக்கீடு வழங்கப்படும் என்ற அரசின் முடிவை பல்வேறு தரப்பினரும் வரவேற்கின்றனர்.
மேலும், வாசிக்க:
TN Budget: PTR வெளியிடப்போகும் வெள்ளை அறிக்கையில் என்ன இருக்கும்... வெள்ளை அறிக்கை என்றால் என்ன?