Tokyo Olympics Wrestling: ஒலிம்பிக் மல்யுத்தம் : இந்தியாவிற்கு 4-வது பதக்கத்தை உறுதி செய்தார் ரவிக்குமார் தாஹியா..!
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ மல்யுத்த அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா பங்கேற்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா 57 கிலோ எடைப்பிரிவிலும், தீபக் பூனியா 87 கிலோ எடைப்பிரிவிலும், அன்ஷூ மாலிக் 57 கிலோ எடைப்பிரிவிலும் போட்டியிட்டனர். கொலம்பிய அணி வீரர் ஆஸ்கருக்கு எதிரான முதல் சுற்றுப்போட்டியில் களமிறங்கிய ரவிக்குமார் தாஹியா, 13-2 என்ற புள்ளிக்கணக்கில் போட்டியை வென்று காலிறுதிக்கு முன்னேறினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற காலிறுதி சுற்றில், பல்கேரியாவைச் சேர்ந்த ஜார்ஜி வேலண்டினோவை எதிர்த்து போட்டியிட்ட அவர், 14-4 என்ற புள்ளி கணக்கில் போட்டியை வென்றார். அத்துடன் அரையிறுதிப் போட்டியில் நுழைந்து அசத்தினார்.
இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா கஜகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நூருளிஸ்லாம் சனாயேவை எதிர்த்து விளையாடினார். முதல் ரவுண்டில் தொடக்கத்தில் ரவிக்குமார் தாஹியா சற்று தடுப்பு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதன்பின்னர் அந்த ரவுண்டின் இறுதியில் 2 புள்ளிகள் எடுத்தார். இதனால் முதல் ரவுண்டின் முடிவில் ரவிக்குமார் தாஹியா 2-1 என இருந்தார். இதனைத் தொடர்ந்து இரண்டாவது ரவுண்டில் கஜகிஸ்தான் வீரர் சுதாரித்து கொண்டு வேகமாக 8 புள்ளிகளை எடுத்தார். இறுதியில் கஜகிஸ்தான் வீரரை பின் முறையில் தோற்கடித்து ரவிக்குமார் தாஹியா வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அத்துடன் இந்தியாவிற்கு தங்கம் அல்லது வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார். நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா பங்கேற்கிறார். இறுதிப் போட்டியில் ரவிக்குமார் தாஹியா ரஷ்ய வீரர் உகுயேவை எதிர்த்து விளையாட உள்ளார்.
Ravi Dahiya you beauty!
— India_AllSports (@India_AllSports) August 4, 2021
Amazing comeback by Ravi from 2-9 down to storm into Final (FS 57kg); pinned 2 time World Championships medalist Nurislam Sanayev 🥳🥳#Tokyo2020 #Tokyo2020withIndia_AllSports pic.twitter.com/HgZbWP22nE
23 வயதாகும் ரவிக்குமார் தஹியா, 2015ஆம் ஆண்டு ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி பதக்கம் வென்றதன் மூலம் பிரபலம் அடைய தொடங்கினார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் 57 கிலோ எடைப் பிரிவில் வெண்கலம் வென்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். இந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 57 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 57 கிலோ பிரிவில் இவர் 4ஆம் நிலை வீரராக உள்ளார்.
முன்னதாக பெண்களுக்கான மல்யுத்தம் 57 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட இந்தியாவின் அன்ஷு மாலிக், சர்வதேச மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற பல்கேரியாவின் இரியானா குராச்கினாவை எதிர்த்து விளையாடினார். இந்த போட்டியில் 2-8 என்ற புள்ளிக்கணக்கில் அன்ஷூ மாலிக் போட்டியை இழந்தார். இதனால், காலிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளார். எனினும், மல்யுத்த ரெபிசாஜ் முறைப்படி வெண்லகப் பதக்கம் வெல்வதற்கான போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அன்ஷூ மாலிக்கிற்கு உள்ளது. 19 வயதேயான அன்ஷூ மாலிக், 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார்.
மேலும் படிக்க: சூடுபிடித்த களம்... இந்தியாவுக்கு வெண்கலம்... தோற்றாலும் வென்ற லோவ்லினா!