TN Budget 2022 Education: பட்ஜெட் தாக்கல் செய்த பிடிஆர்.. தட்டித்தூக்கிய அன்பில் மகேஷ்.. கல்வி தொடர்பான அறிவிப்புகள்.. முழு அலசல்..
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தன்னுடைய துறைக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.
2022- 23ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் நேற்று (மார்ச் 17) தாக்கல் செய்யப்பட்டது. அதை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இது என்பதால் பெருத்த எதிர்பார்ப்பு நிலவியது.
இதில் பள்ளிக் கல்வித்துறைக்கு அதிகபட்சமாக 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தன்னுடைய துறைக்கு முக்கியத்துவம் தரும் திட்டங்களைப் பெற்றுத் தந்துள்ளார்.
குறிப்பாக இல்லம் தேடிக் கல்வித் திட்டம் 200 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் மீண்டும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம், 15 மாவட்டங்களில் மாதிரிப்பள்ளிகள், மாவட்ட மத்திய நூலகங்கள் உள்ளிட்ட திட்டங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் பள்ளிக் கல்வித்துறையில் வெளியான அறிவிப்புகள்:
* தாய்மொழி கல்வியே தலைசிறந்த கல்வி என்பது அறிவியல் கூறும் உண்மையாகும். தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பாடநூல், நோட்டுப்புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவியின்றிச் செயல்பட்டு வரும், தமிழ் வழியில் மட்டும் பாடங்களைக் கற்பிக்கும் பள்ளிகளில் இலவசமாக 1 முதல் 10 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு முதல் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்படும்.
* கடந்த இரண்டு ஆண்டுகள் பெருந்தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததன் காரணமாக, மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இழப்பை ஈடுசெய்யும் வகையில் “இல்லம் தேடிக் கல்வி” என்ற சிறப்பான முன்னோடிக் கல்வித் திட்டம் 38 மாவட்டங்களில் 1.8 லட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் நமதுநாட்டிற்கே ஒரு முன்னோடியாகத் திகழ்கிறது.
இதன் வாயிலாக 30 லட்சம் மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெருந்தொற்றால் பெருமளவில் கல்வி கற்றலில் இழப்பு ஏற்பட்டுள்ளதால், இத்திட்டம்வரும் நிதியாண்டிலும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். இதற்காக, 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* அரசுப் பள்ளி மாணவர்கள், புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் STEAM - அதாவது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கலை மற்றும் மருத்துவம் போன்ற பிரிவுகளில் சேர்ந்து, கல்வி பெற உதவும் நோக்கோடு, கல்வியில் பின்தங்கியுள்ள 10 மாவட்டங்களில்முன்மாதிரிப் பள்ளிகளை
இந்த அரசு தொடங்கியுள்ளது. வரும் நிதியாண்டில்,மேலும் 15 மாவட்டங்களில் இத்தகைய முன்மாதிரிப்பள்ளிகள் (Model Schools) தொடங்கப்படும். இத்திட்டத்திற்காக 125 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை (ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் உட்பட) நவீன மயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும்.
இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (smart classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும்.
* அடுத்த ஐந்து ஆண்டுகளில், இத்திட்டங்கள்படிப்படியாக 7,000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும். வரும் நிதியாண்டில் 1,300 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
* மாநிலத்தில் இயங்கி வரும் பொது நூலகங்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து, மேம்படுத்தத் தேவையான ஆலோசனைகள் வழங்க ஓர் உயர்மட்டக் குழுவை அரசு அமைத்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட ஆறு மாவட்டங்களில், 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடுத்த இரண்டு ஆண்டுகளில் உயர்தர வசதிகளுடன் கூடிய மாவட்ட மத்திய நூலகங்கள் அரசால் ஏற்படுத்தப்படும். இந்நூலகக் கட்டடங்களுக்கு தமிழ் அறிஞர்களின் பெயர்கள் சூட்டப்படும்.
மேற்குறிப்பிட்ட திட்டங்களுக்காக பள்ளிக் கல்வித்துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல உயர் கல்வித்துறை சார்ந்தும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் பொன்முடியின்கீழ் இந்தத் துறை இயங்கி வருகிறது. அதுசார்பில் வெளியான அறிவிப்புகள் இதோ:
தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும். உலகளாவிய பங்களிப்புடன், “அறிவு சார் நகரம்” (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும். இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தேகொண்டிருக்கும்.
மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசுபொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.
தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதற்கேற்ப, அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய் செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி, புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள், திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு 5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நான் முதல்வன்
ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின்தனித் திறமைகள்அடையாளம் காணப்பட்டு,அவை ஊக்குவிக்கப்படும். மேலும்,தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன்பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் வேலை பெறும் திறன் (employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த, 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகளாக, பேராசிரியர்களாக, தொழில் நிபுணர்களாக தமிழர்கள் தங்களது துறையில் சாதனை புரிகிறார்கள். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல், வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இவர்களுடன் இணைந்து செயல்படுத்த
ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 ஆம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை,மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமூக நலன் சார்ந்த திட்டங்கள்
ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்,
டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1,949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1,949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.