TN 12th Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் - ஆச்சரியப்படுத்திய கோவை இரட்டையர்கள்
அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இரண்டு பேரும் 600 மதிப்பெண்ணுக்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
![TN 12th Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் - ஆச்சரியப்படுத்திய கோவை இரட்டையர்கள் Tamil Nadu 12th Result 2023 Coimbatore Twins Scored Same Mark TN HSC Result TNN TN 12th Result: 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் - ஆச்சரியப்படுத்திய கோவை இரட்டையர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/11/16fc4611e0d0f45ce2f2607954dbd0f51683793595556188_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கோவையில் வெவ்வேறு பாடப்பிரிவில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய இரட்டையர்கள் ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
கோவை வடவள்ளி - தொண்டாமுத்தூர் சாலையில் உள்ள வேம்பு அவன்யூவை சேர்ந்தவர் சுவாமிநாதன். இவரது மனைவி ஜெயசுதா. இவர்களுக்கு நிரஞ்சன், நிவேதா என இரட்டை குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவரும் வடவள்ளி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தனர். இந்த நிலையில் அண்மையில் வெளியான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில், நிரஞ்சன் மற்றும் நிவேதா ஆகிய இரண்டு பேரும் 600 மதிப்பெண்ணுக்கு 530 மதிப்பெண்கள் என ஒரே மதிப்பெண் எடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளனர். இருவரும் பாட வாரியாக வெவ்வேறு மதிப்பெண்களை பெற்று இருந்த போதிலும், ஒரே மொத்த மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
சிறுவயதிலிருந்தே பல விஷயங்களில் ஒற்றுமையாக இருந்தாலும், படிப்பு விஷயத்தில் போட்டி போட்டு படிக்கும் இருவருக்கும், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்துள்ளனர். நிரஞ்சன் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு, நிவேதா பிசினஸ் மேக்ஸ் பாடப்பிரிவு என இருவரும் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் படித்தாலும், வெவ்வேறு நாட்களில் தேர்வு எழுத சென்றாலும், இறுதியாக வந்த மொத்த மதிப்பெண்ணை ஒரே மாதிரியாக எடுத்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இருவரில் யார் பெரியவர்? யார் திறமைசாலி என்கின்ற போட்டிக்கு இடமில்லாமல் இருவரும் சமம் என்பதை குறிக்கும் வகையில் மதிப்பெண் வெளியாகி உள்ளதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் கடந்த 8 ம் தேதியன்று 12 வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியானது. இதில் விருதுநகர் மாவட்டம் 97.85 சதவீதம் பெற்று முதலிடத்தையும், திருப்பூர் 97.79 சதவீதம் பெற்று 2ஆம் இடத்தையும், பெரம்பலூர் 97.59 சதவீதம் பெற்று 3 ஆம் இடத்தையும் கோயமுத்தூர் 97.57 சதவீதம் பெற்று நான்காம் இடத்தை பிடித்துள்ளது. கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 34 ஆயிரத்து 327 மாணவ, மாணவிகளில் 33 ஆயிரத்து 493 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம் போல மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை 96.42 சதவீதமாகவும், மாணவிகள் தேர்ச்சி எண்ணிக்கை 98.55 சதவீதமாகவும் பதிவாகியது. கோவை மாநகராட்சியில் உள்ள 33 பள்ளிகளில் ராமகிருஷ்ணாபுரம் பெண்கள் பள்ளியில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். அது போல கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 158 மாற்றுத் திறனாளிகளில் 149 பேரும், மாவட்டத்தில் தேர்வு எழுதிய 21 பார்வை மாற்றுத்திறனாளும் தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)