EXCLUSIVE: “வழக்கறிஞராவதே எனது லட்சியம்” - 10 ஆம் வகுப்பில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர் பிரத்யேக பேட்டி..!
அரசு எனது மேல் படிப்பிற்கு ஏதாவது உதவி செய்தால் அதுவே எனக்கு போதும். என்னாலே இந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெற முடிகிறது என்றால் மற்ற மாணவர்களாலும் முடியும், கண்டிப்பாக முடியும்.
10- ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியது. இந்த நிலையில் நெல்லையில் கை, கால் செயலிழந்து நடக்க முடியாத மாற்றுத்திறனாளி மாணவர் கடினமாக படித்து 420 மதிப்பெண்கள் எடுத்து சாதனை நிகழ்த்தி அசத்தியுள்ளார்.
நெல்லை மீனாட்சிபுரம் புளியந்தோப்பு நடுத்தெருவை சேர்ந்தவர் சசிகுமார் - பாப்பம்மாள் தம்பதியினர். இவர்களது மகன் தமிழ்செல்வம். இவரின் தந்தை சசிகுமார் தனியார் பேக்கரி கடை ஒன்றில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.. மாணவர் தமிழ்செல்வம் பிறவி முதலே கை கால்கள் செயல் இழந்து நடக்க முடியாத மாற்றுதிறனாளி மாணவனாக உள்ளார். இருப்பினும் தனது தன்னம்பிக்கையின் காரணமாக மனம் தளராது 6- ம் வகுப்பு முதல் நெல்லை சந்திப்பில் உள்ள மதிதா இந்து பள்ளியில் பயின்று வருகிறார். பெற்றோரின் உதவியுடன் பள்ளி சென்று வரும் நிலையில் இந்த ஆண்டு 10 வகுப்பு பொதுத் தேர்வு உதவியாளர் வைத்து எழுதியிருந்த நிலையில் இன்று தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாணவர் தமிழ்செல்வம் தனது கடின முயற்சியால் 420 மதிப்பெண்கள் எடுத்து சாதனை நிகழ்த்தியுள்ளார். தமிழ் பாடத்தில் 88 மதிப்பெண்களும் ஆங்கிலத்தில் 76 மதிப்பெண்களும், கணிதப் பாடத்தில் 88 மதிப்பெண்களும், அறிவியல் பாடத்தில் 83 மதிப்பெண்களும், சமூக அறிவியலில் 85 மதிப்பெண்களும் எடுத்து அசத்தியுள்ளார்.
இதுகுறித்து மாணவர் தமிழ்செல்வம் ஏபிபி நாடுவிற்கு அளித்த பேட்டியில், “கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும் முதலில் 420 மதிப்பெண்கள் கிடைக்க காரணமாக இருந்த எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள், சகோதர, சகோதரிகள், நண்பர்களுக்கு என அனைவரும் எனக்கு உதவியாகவும், ஆதரவாகவும் இருந்ததாலே என்னால் இந்த மதிப்பெண் பெற முடிந்தது. என்னை போன்றோருக்கு 400 மதிப்பெண்ணுக்கு தான் எழுத வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு தேர்வு எழுதிய உதவியாளராக வந்த ஆசிரியர் என்னுடைய முயற்சியால் 500 மதிப்பெண்ணுக்கு எழுத உதவினார். அவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், மேல்நிலைக் கல்வியில் வரலாற்று பாடப்பிரிவு எடுத்து படிக்க உள்ளேன். எனது எதிர்கால லட்சியம் சட்டம் படித்து சிறந்த வழக்கறிஞராக வேண்டும் என்பதுதான். அரசு எனது மேல் படிப்பிற்கு ஏதாவது உதவி செய்தால் அதுவே எனக்கு போதும். என்னாலே இந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெற முடிகிறது என்றால் மற்ற மாணவர்களாலும் முடியும், கண்டிப்பாக முடியும்” என்று மற்றவர்களுக்கு நம்பிக்கை தெரிவித்தார்.