TN 10th 12th Result 2024: 10, 12ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? விடைத்தாள் திருத்தும் பணி தீவிரம்
Tamil Nadu 10th 12th Result 2024 Date: தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தின்கீழ் படித்த 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் முறையே மே 10 மற்றும் மே 6ஆம் தேதிகளில் வெளியாக உள்ளன.
2023- 24ஆம் கல்வியாண்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுதினர். இவர்களின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக தமிழகம் முழுவதும் 83 தேர்வு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகளில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்களுக்கு பல்வேறு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.
மாநிலக் கல்வி பாடத் திட்டத்தில் 12ஆம் வகுப்பு, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் அண்மையில் நடைபெற்று முடிந்தன. குறிப்பாக 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் மார்ச் 22ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வை சுமார் 7.6 லட்சம் மாணவர்கள் எழுதினர். விடைத்தாள் திருத்துதல் பணிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொடங்கின. தொடர்ந்து 13ஆம் தேதி வரை திருத்துதல் பணிகள் நடைபெற்றன.
தற்போது பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிவடைந்து, மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு கடந்த மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடந்தது. பிப்ரவரி 23 முதல் 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 9.10 லட்சம் மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதினர். இவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 13ஆம் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.
தமிழ் வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள், தமிழ்வழி விடைத்தாள்களை மட்டும் ஆங்கில வழியில் கற்பிக்கும் ஆசிரியர்கள் ஆங்கில வழி விடைத்தாள்களை மட்டும் திருத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மதிப்பீடு செய்த விடைத் தாள்களிலேயே மதிப்பெண்களில் அதிக அளவில் இருந்த வேறுபாடு மறுகூட்டலின்போது கண்டறியப்பட்டது. இது இந்த ஆண்டு தவிர்க்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது?
இந்த நிலையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6ஆம் தேதி வெளியாக உள்ளன. அதேபோல 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதி வெளியாக உள்ளன.
2023ஆம் ஆண்டு பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே 8ஆம் தேதி வெளியான நிலையில், 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகின. இதுவே 2022ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
தேர்ச்சி விகிதம் எப்படி?
12ஆம் வகுப்பு மாணவர்கள் 8, 03,385 பேர் பொதுத் தேர்வை எழுதிய நிலையில், 7,55,451 பேர் தேர்ச்சி பெற்று இருந்தனர். அதாவது தேர்ச்சி விகிதம் 94.03 சதவீதமாக இருந்தது.
அதேபோல 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9,14,320 தேர்வர்கள் எழுதிய நிலையில், 8,35,614 பேர் தேர்ச்சி அடைந்து இருந்தனர். பிளஸ் 2 மாணவர்களைக் காட்டிலும் 10ஆம் வகுப்புத் தேர்ச்சி விகிதம் குறைந்து, 91.39% ஆக இருந்தது.
கூடுதல் தகவல்களுக்கு: https://dge.tn.gov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்யலாம்.