TN 10th, 11th Supplementary Exam: 10, 11ஆம் வகுப்பு துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
10th Supplementary Exam 2023 Tamil Nadu: 10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
10, 11ஆம் வகுப்பு துணைத்தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மாநிலக் கல்வி வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19 ஆம் தேதி அன்று வெளியாகின. மொத்தம் 9,14, 320 மாணவ, மாணவியர்கள் எழுதிய இந்த தேர்வில் 8,35, 614 பேர் தேர்ச்சியடைந்தனர். மொத்தம் 78,706 மாணவர்கள் தோல்வியடைந்துள்ளனர்.
இதனைத் தொடந்து தோல்வியடைந்த மாணவர்களுக்கான துணைத்தேர்வு குறித்த அறிவிப்பை தேர்வுத்துறை வெளியிட்டது. அதன்படி ஜூன் மாதத்தில் தேர்வுகள் நடைபெற உள்ளன. இதற்கு மாணவர்கள் நாளை (மே 23ஆம் தேதி) முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
மதிப்பெண் சான்றிதழ் எப்போது?
மேலும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் மே 26 ஆம் தேதி முதல் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு மே 24 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
துணைத் தேர்வு தேதிகள்
10 ஆம் வகுப்பு துணைத்தேர்வானது ஜூன் 27 ஆம் தேதி முதல் நடக்க உள்ளது. ஜூன் 27ஆம் தேதி மொழித் தாளும் 28ஆம் தேதி ஆங்கிலப் பாடமும் நடைபெற உள்ளது. ஜூன் 30ஆம் தேதி கணிதப் பாடமும் ஜூலை 1ஆம் தேதி விருப்ப மொழித் தாளுக்கும் ஜூலை 3ஆம் தேதி அறிவியல் பாடத்துக்கும் துணைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. ஜூலை 4ஆம் தேதி சமூக அறிவியல் பாடத்துக்குத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
விண்ணப்பிப்பது எப்படி?
துணைத் தேர்வுக்கு மாணவர்கள் நாளை (மே 23ஆம் தேதி) முதல் 27 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். நண்பகல் 12 மணி முதல், மே 27ஆம் தேதி வரை மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இத்தேர்விற்கு பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் வழியாகவும், தனித் தேர்வர்கள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்கள் (Government Examinations Service centres) வாயிலாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தக் கால அவகாசத்தில் விண்ணப்பிக்க முடியாத மாணவர்கள், தத்கல் சிறப்பு அனுமதித் திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க மே 30, 31ஆம் தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 10ஆம் வகுப்புக்கு சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 11ஆம் வகுப்புக்கு சிறப்பு அனுமதிக் கட்டணமாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.