IIT: அதிகரிக்கும் ஐஐடி தற்கொலைகள்; பாகுபாடு கூடாது, உளவியல் ஆலோசகர்கள் நியமனம்- மத்திய அமைச்சர் அறிவிப்பு
ஐஐடிக்களில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐஐடிக்களில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.
மத்திய அரசின் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐஐடிக்களில் மாணவர்களின் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், ஐஐடிக்களில் உளவியல் ஆலோசகர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். ஐஐடிக்களில் எந்த பாகுபாடும் காட்டக்கூடாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஐஐடி புவனேஸ்வரில் ஐஐடி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. 7 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான ஐஐடி கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில், மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கலந்துகொண்டார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக கல்விக் கட்டணத்தை உயர்த்த வேண்டிய அவசியம் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. எனினும் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
பாகுபாட்டுக்கு சகிப்புத் தன்மையே இருக்கக்கூடாது
'கல்வி நிலையங்களில் காட்டப்படும் பாகுபாட்டுக்கு சகிப்புத் தன்மையே இருக்கக்கூடாது' என்றும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஐஐடியும் உளவியல் சிக்கல்களோடு போராடும் மாணவர்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல ஐஐடியில் முதுகலை படிக்கும் மாணவர்கள், படிப்பில் பாதியிலேயே இடைநின்று வேலையில் சேர்வது அதிகமாக உள்ளது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
ஐஐடிக்களில் அடுத்த சில மாதங்களில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அழைக்கப்பட்டு, உளவியல் நலம் குறித்த சிறப்பு சந்திப்பு நடத்தப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் மிகவும் குறிப்பிடத்தக்க கல்வி நிறுவனங்களில் ஐஐடி என்று அழைக்கப்படும் இந்தியத் தொழில்நுட்ப கழகங்கள் முக்கியமானவை ஆகும். இங்கு கடந்த சில ஆண்டுகளாக மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் துயர சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
ஐஐடி நிர்வாகம் விளக்கம்
முன்னதாக தொடரும் தற்கொலைகள் தொடர்பாக சென்னை ஐஐடி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ’’எம்.எஸ். முதுநிலைப் பட்டப் படிப்பில் மின்னணு மற்றும் மின்னியல் பொறியியல் பிரிவில் 2ஆம் ஆண்டு படித்துவந்த மாணவரின் உயிரிழப்பு அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் நல் வாழ்வை மேம்படுத்துவதற்கு ஐஐடி சென்னை கல்வி நிறுவனம் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான உறுதியையும் வழங்குகிறது’’ என்று சென்னை ஐஐடி நிர்வாகம் தெரிவித்தது.
இந்த நிலையில், ஐஐடி கவுன்சில் கூட்டத்தில் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
Naan Mudhalvan: நான் முதல்வன்; அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உயர்கல்வி ஆலோசனைக் குழு- விவரம்