Chennai Budget: STEM பயிற்சி, சிசிடிவி கேமராக்கள், தொழிற்பயிற்சி: மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளிகளுக்கு வாரி வழங்கிய மேயர் பிரியா
2024- 2025ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் செய்தார். அதில், மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களை மேயர் பிரியா வெளியிட்டார்.
சென்னை மாநகராட்சியின் 2024- 2025ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டில் பள்ளிக் கல்விக்கென பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 2024- 2025ஆம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட்டை மேயர் பிரியா ராஜன் இன்று தாக்கல் செய்தார். அதில், மாநகராட்சியின் கீழ் இயங்கும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதி ஒதுக்கீடு குறித்த தகவல்களை மேயர் பிரியா வெளியிட்டார். அதில் கூறி இருப்பதாவது:
’’சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களைக் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ரூ.47 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2024-25ஆம் கல்வி ஆண்டில் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்கள் 62 ஆயிரம் பேருக்கு ஒரு ஜோடி காலணி மற்றும் 2 ஜோடி காலுறைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கென ரூ.3.59 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் திறமை மிக்க மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு STEM (Science, Technology, Engineering, Maths) பயிற்சி வழங்கப்படும். இந்தத் திட்டம் 2021ஆம் கல்வி ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல சென்னை பள்ளிகளில் உடனடி பழுது பார்க்கும் பணிக்கு ரூ.1.32 கோடி நிதி வழங்கப்பட உள்ளது.
பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள்
பள்ளிகளில் 255 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. பள்ளிகளின் பாதுகாப்பு கருதி பள்ளி ஒன்றுக்கு தலா 4 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதற்கு ரூ.7.64 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
2024- 25ஆம் கல்வியாண்டில் 419 பள்ளிகளில் படிக்கும் எல்கேஜி முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு 2 செட் சீருடைகள் வழங்கப்படும். இதில் மொத்தம் 1,20,175 மாணவர்கள் பலன் அடைவார்கள்’’.
இவ்வாறு மேயர் பிரியா ராஜன் அறிவித்துள்ளார்.