மாநிலம் முழுவதும் நாளை போராட்டம்; 3 நாள் கோட்டை முற்றுகை: டிட்டோஜேக் ஆசிரியர் சங்கம் அறிவிப்பு- ஏன்?
மாநிலம் முழுவதும் நாளை வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற உள்ளதாக டிட்டோஜேக் எனும் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் இறுதியில் 3 நாள் கோட்டை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்றும் டிட்டோஜேக் அறிவித்துள்ளது.
இதுகுறித்து டிட்டோஜாக் தெரிவித்து உள்ளதாவது:
’’தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பின் மாநில உயர் மட்டக் குழுக் கூட்டம் நேற்று (08.09.2024) காணொளி வழியே நடைபெற்றது. கூட்டத்திற்கு டிட்டோஜாக் மாநில உயர் மட்டக்குழு உறுப்பினரும் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் (பொறுப்பு) ராஜேந்திரன் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு டிட்டோஜாக் பேரமைப்பு 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவுள்ள 10.09.2024 ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டம் மற்றும் 29.09.2024, 30.09.2024, 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் தொடர் கோட்டை முற்றுகைப் போராட்டம் ஆகிய போராட்ட அறிவிப்புகளைத் தொடர்ந்து டிட்டோ ஜாக் பேரமைப்பை 08.09.2024 அன்று பள்ளிக் கல்வித்துறைச் செயலாளரு தொடக்கக் கல்வி இயக்குநரும் அழைத்து கோரிக்கைகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாதகமான எந்த அறிவிப்பும் இல்லை
பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்ற நிலையில் அது தொடர்பாக தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு வெளியிடப்பட்டது. அந்த செய்திக் குறிப்பை முழுமையாக ஆய்வு செய்ததில், டிட்டோஜாக் மாநில உயர் மட்டக்குழு, டிட்டோஜாக்கின் 31 அம்சக் கோரிக்கைகளில் பெரும்பாலான முக்கியக் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக சாதகமான எவ்வித அறிவிப்புகளும் 4 பக்க செய்திக் குறிப்பில் இடம் பெறவில்லை.
இதனால் திட்டமிட்டவாறு 10.09.2024 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தையும், 29.09.2024, 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய மூன்று நாட்கள் கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் திட்டமிட்டபடி வலிமையுடன் நடத்துவதென ஏகமனதாகத் தீர்மானிக்கிறது’’.
இவ்வாறு டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு சொன்னது என்ன?
’’10.09.2024 அன்று 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் மாவட்ட தலைநகரங்களில் திட்டமிட்டுள்ளது சார்பாக 06.09.2024 அன்று தொடக்கக் கல்வி இயக்குநர் தலைமையில் டிட்டோஜாக் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஏற்கனவே, டிட்டோஜாக் சார்பில் 30 அம்சக்கோரிக்கைகளை வலியுறுத்தி 13.10.2023 அன்று சென்னையில் பேராசிரியர் அன்பழகனார் ஒருங்கிணைந்த கல்வி வளாகத்தில் ஆர்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, 12.10.2023 அன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தலைமையில், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 அம்சக்கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மேலும், டிட்டோஜாக் அமைப்பு 31 அம்சக்கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் மூன்று நாள் டி.பி.ஐ. வளாக முற்றுகைப் போராட்ட அறிவிப்பினை தொடர்ந்து பள்ளிக் கல்வித்துறைச் செயலர் மற்றும் இயக்குநர்களுடன் 22.07.2024 மற்றும் 30.07.2024 ஆகிய தேதிகளில் தலைமைச் செயலகத்தில் இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 06.09.2024 அன்று நடைபெற்ற கூட்டத்தில் சில கோரிக்கைகள் ஏற்கப்படுவதாகவும் சில நீதிமன்ற வழக்குகளால், நிலுவையில் இருப்பதாகவும் ஒரேயொரு கோரிக்கையை மட்டும் ஏற்க இயலாது’’ என்றும் அரசு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.