12th Tamil Exam: பிளஸ் 2 தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு?- அமைச்சர் உதயநிதி தகவல்
பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாடத் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 பொதுத் தேர்வு மொழிப்பாடத் தேர்வில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் கலந்துகொள்ளாத நிலையில், தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு நேற்று தொடங்கியது. இந்தத் தேர்வை வழக்கமான மாணவர்களோடு, தனித் தேர்வர்கள் 23,747 பேர், மாற்றுத் திறனாளிகள் 5,206 பேர், 90 சிறைவாசிகள் என மொத்தம் 8,36,593 பேர் தேர்வு எழுதினர். புதுச்சேரி மாணவர்கள் 14,710 பேர் சேர்த்து, இந்த எண்ணிக்கை 8,51,303 ஆக இருந்தது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. இது கல்வித் துறை வட்டாரத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தேர்வை எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர், குன்னம் பேருந்து நிலையம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டித் தேர்வுக்கான நூலகத்தை திறந்து வைத்த பின்பு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்வு எப்போது?
ஏப்ரல் 3 ஆம் தேதி வரை நடைபெறும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி தேர்வு அறைக்குள் செல்போன் உள்ளிட்ட மின் சாதனங்களை கொண்டு செல்லவும், ஹால் டிக்கெட்டில் இடம் பெற்றுள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் இருக்கை, குடிநீர் வசதி, கழிப்பறை என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வானது பிற்பகல் 1.15 மணி வரை நடைபெறுகிறது. 10 மணிக்கு புகைப்படம், பதிவெண் (regiter number/roll number), பாடம் முதலான விவரங்கள் கொண்ட முதன்மை விடைத்தாள்கள் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு அறையில் வழங்கப்படும். இவற்றை சரிபார்த்த பின் 10.15 மணிக்கு தேர்வு எழுத தொடங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிற கட்டுப்பாடுகள்
தேர்வு அறையில் செல்போன் கொண்டு செல்வது, ஆள்மாறாட்டம், துண்டுதாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, விடைத்தாள் மாற்றிக்கொள்வது உள்ளிட்ட செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இந்த செயல்களை ஊக்கப்படுத்த நினைத்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு காலங்களில் காலை 8 முதல் இரவு 8 மணி வரை சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில் 9498383081, 9498383075 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.