சமக்ர சிக்ஷா திட்டமும், பிஎம்ஸ்ரீ பள்ளி திட்டமும் வேறு வேறு; நிதியை நிறுத்துவது ஏன்?- உடனே வழங்கக் கோரிக்கை
பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த மறுத்ததற்காக தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பது நியாயமற்றது என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை ஏற்காததற்காக தமிழகத்திற்கான நிதி ரூ.573 கோடியை நிறுத்திவைப்பதா என்று கேள்வி எழுப்பியுள்ள பாமக தலைவர் அன்புமணி, அதை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு:
''ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் 2024-25ஆம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில் தமிழகத்திற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இன்று வரை வழங்கவில்லை. இதற்காக மத்திய அரசுத் தரப்பில் கூறப்படும் காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.
ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படியான ஆண்டு மொத்த செலவான ரூ.3586 கோடியை மத்திய அரசும், மாநில அரசும் 60:40 என்ற விகிதத்தில் பகிர்ந்து கொள்கின்றன. அதன்படி தமிழகத்திற்கு மத்திய அரசு மொத்தம் ரூ.2152 கோடி வழங்க வேண்டும். அதில் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டுக்கு வழங்க வேண்டிய ரூ.573 கோடியை மத்திய அரசு இதுவரை வழங்காததுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை அம்சங்களை செயல்படுத்த நிபந்தனை
டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்ட ஆய்வுக் கூட்டத்தின்போது, தமிழ்நாட்டில் பி.எம்ஸ்ரீ பள்ளிகளை தமிழக அரசு திறக்க வேண்டும்; அவற்றில் மும்மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும்; தமிழ்நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் 10+2+3 கல்வி முறைக்கு மாறாக, 5+3+3+4 கல்வி முறையை கடைபிடிக்க வேண்டும்; தொழில்கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்களை செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. ஆனால், அந்த நிபந்தனைகள் இல்லாமல் பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை செயல்படுத்துவதாக தமிழக அரசு அரசு தெரிவித்த யோசனையை ஏற்க மத்திய அரசு மறுத்து விட்டது.
ஒருங்கிணைந்த கல்வித்திட்டமும், பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டமும் வேறு வேறு திட்டங்கள் ஆகும். பி.எம்.ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை நிபந்தனைகளுடன் செயல்படுத்த மறுத்ததற்காக தமிழக அரசுக்கு வழங்க வேண்டிய நிதியை மறுப்பது நியாயமற்றது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை மாநில அரசுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.
மாநில அரசுகள் தங்களுக்கான கல்விக் கொள்கையை வகுத்துக் கொள்ள அதிகாரம் உள்ளது. எனவே, புதிய கல்விக் கொள்கையையும், பி.எம்.ஸ்ரீ பள்ளிகளையும் காரணம் காட்டி ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதியை மறுப்பது அநீதி.
மத்திய அரசு நெருக்கடியை ஏற்படுத்துவதா?
மத்திய அரசு நிதி வழங்காததால், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு அடுத்த மாதம் முதல் ஊதியம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆசிரியர்களுக்கான பயிற்சி, மாணவிகளுக்கான தற்காப்பு பயிற்சி, கல்வி உரிமை சட்டத்தின்படி தனியார் பள்ளிகளுக்கு வழங்க வேண்டிய தொகை ஆகியவற்றையும் வழங்க முடியாத நிலைக்கு தமிழக அரசு ஆளாகியிருக்கிறது. இப்படி ஒரு நெருக்கடியை மத்திய அரசு ஏற்படுத்தக்கூடாது.
மாநில உரிமைகளை பாதுகாப்பதாகக் கூறிக் கொள்ளும் தமிழக அரசு, மறுக்கப்பட்ட நிதியை பெறுவதற்காக எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. அண்மையில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கூட திமுக மற்றும் கூட்டணி உறுப்பினர்கள் இது குறித்து வாயைத் திறக்கவில்லை. தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையையோ, 5 மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதையோ ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்படி வழங்கப்பட வேண்டிய நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சட்ட அழுத்தங்களை தமிழக அரசு வழங்க வேண்டும்''.
இவ்வாறு அன்புமணி பதிவிட்டுள்ளார்.