நீட் தேர்வை எழுத உள்ள புதுக்கோட்டை மாணவர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு
வரும் 30ம் தேதி வரை ஒரு மாத காலம் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படும்.

புதுக்கோட்டை: அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களே உங்களுக்கு ஒரு அருமையான வாய்ப்பை கல்வித்துறை ஏற்படுத்தி தந்துள்ளது. என்ன தெரியுங்களா?
புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுக்கூட அரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 3ம் ஆண்டு பயின்ற மாணவர்களில் நீட் நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது.
இதை மாவட்ட கலெக்டர் அருணா தொடக்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது; தமிழ்நாடு முதலமைச்சர் மாணவர்களின் கல்வி நலன் மீது மிகுந்த அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில், பள்ளிக்கல்வித்துறையின் சார்பில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், உயர்கல்விகளுக்கான பயிற்சி வகுப்புகள் மற்றும் ஆலோசனைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2ம் ஆண்டு பயின்ற மாணவர்களில் நீட் நுழைவுத்தேர்விற்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்பு துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களுக்கு நீட் தேர்வு சம்பந்தமான கருத்துக்களை எடுத்துக் கூறி தேர்வை கடினமாகக் கருதாமல் எளிமையாக எடுத்துக் கொண்டு, பயிற்சி வழங்கும் ஆசிரியர்கள் சொல்லக்கூடிய கருத்துக்களை முழுமையாக உள்வாங்கி திட்டமிட்டு நன்றாக படித்து, தேர்வு எழுதினால் அனைவரும் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என்று தன்னம்பிக்கையை ஊட்டி வாழ்த்து தெரிவிக்கிறோம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சியானது, புதுக்கோட்டை இராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் இலுப்பூர் ஆர்.சி உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி ஆகிய பயிற்சி மையங்களில் நடைபெறுகிறது.
இப்பயிற்சியானது, வரும் 30ம் தேதி வரை ஒரு மாத காலம் வழங்கப்பட உள்ளது. பயிற்சியில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு பயிற்சி வழங்கப்படும். பயிற்சியின் இறுதியில் மாணவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தப்படும். பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர்களாக தலைமை ஆசிரியர்களும் மற்றும் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நீண்ட பணி அனுபவத்துடன் நீட் தேர்வில் பயிற்சி பெற்ற முதுகலை ஆசிரியர்கள் பயிற்சியாளர்களாக செயல்பட உள்ளனர்.
மேலும், மாணவர்களுக்கான நீட் தேர்வு வரும் மே மாதம் 4 -ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரும் தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்படும் இதுபோன்ற பயிற்சி வகுப்புகளை உரிய முறையில் பயன்படுத்திக்கொண்டு சிறப்பான உயர்கல்வியினை பயின்று உயர்ந்த நிலையை அடைய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதில், முதன்மை கல்வி அலுவலர் சண்முகம், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரமேஷ் (புதுக்கோட்டை), ஜெயந்தி (அறந்தாங்கி), பள்ளித் துணை ஆய்வாளர் மாரிமுத்து, தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர். நீட் தேர்வை எழுத உள்ள மாணவர்களுக்கு இது சிறப்பான ஒரு வாய்ப்பாகும். சிறந்த பயிற்சியாளர்களை கொண்டு நடத்தப்படும் இந்த பயிற்சி வகுப்பில் மாணவர்கள் பங்கேற்பதால் அவர்களின் கல்வித்திறன் மேம்பாடு அடையும். மாணவர்களின் உயர்ந்த நிலையை அடையவே அரசு சார்பில் இந்த பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

