புதுச்சேரி பல்கலைக்கழகம் சாதனை ! உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் 28 பேர்!
உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள புதுவை பல்கலைகழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் 28 பேருக்கு கவுரவிப்பு

28 சிறந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் விழா
ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் எல்சிவியர் (Elsevier) பதிப்பகத்துடன் இணைந்து ஆண்டுதோறும் வெளியிடப்படும் உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியலில் (World’s Top 2% Scientists List) இடம்பெற்ற புதுவைப் பல்கலைக்கழகத்தின் 28 சிறந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை கௌரவிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவை புதுவைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் பி. பிரகாஷ் பாபு தலைமை தாங்கி நடத்தி, கௌரவிக்கப்பட்ட விஞ்ஞானிகளுக்கு நினைவுச் சின்னங்களை வழங்கினார்.
இவ்விழாவில் கல்வியியல் இயக்குநர் பேராசிரியர் கே. தரணிக்கரசு, பண்பாட்டுத் துறை இயக்குநர் பேராசிரியர் க்ளெமென்ட் சாகயராஜா லூர்து, பதிவாளர் பேராசிரியர் ரஜ்னீஷ் பூத்தானி, நூலகர் பேராசிரியர் என். விஜயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் தொடக்க உரையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் ஆர். ருக்குமணி பேசுகையில், ஸ்டான்ஃபோர்ட்–எல்சிவியர் தரவரிசையின் முக்கியத்துவத்தையும், பல ஆண்டுகளாக தொடர்ந்து உழைத்த கல்வியாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சிறப்பையும் நினைவுகூர்ந்தார்.
எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள்
இவர்கள் எதிர்கால தலைமுறைகளுக்கு வழிகாட்டும் கலங்கரை விளக்கங்கள் எனக் கூறி, ஆராய்ச்சி என்பது வெறும் கல்விச் செயல் அல்ல, மனித அறிவை விரிவுபடுத்தும் செயல் என்று வலியுறுத்தினார். மேலும், பல்கலைக்கழகம் ஆராய்ச்சி பண்பாட்டை ஊக்குவிக்க உறுதிபட செயல்படும் என்றும் தெரிவித்தார். உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகள் பட்டியல் உலகளவில் பல துறைகளில் குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகளை தரவரிசைப்படுத்தும் முக்கியமான தரவுத்தளமாகும். இப்பட்டியலில் புதுவைப் பல்கலைக்கழகத்தின் 28 பேரின் சேர்க்கை, பல்கலைக்கழகத்தின் உலகளாவிய கல்வி மற்றும் ஆராய்ச்சி புகழை பிரதிபலிக்கிறது.
துறை வாரியாக இடம்பெற்ற விஞ்ஞானிகள்
நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: பேராசிரியர் ஏ. சுப்ரமணியா, பேராசிரியர் எஸ். கண்ணன், பேராசிரியர் ஈ. மணிகண்டன், பேராசிரியர் வடிவேல் முருகன், டாக்டர் எஸ். ரெங்கராஜ்
பசுமை ஆற்றல் தொழில்நுட்பம்: பேராசிரியர் ஏ. ஸ்ரீகுமார், பேராசிரியர் ஆர். பிரசாந்த், டாக்டர் கிருஷ்ணா கே. ஜெய்ஸ்வால்
மாசு கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் பொறியியல்: டாக்டர் பி. செந்தில் குமார், பேராசிரியர் எஸ். எஸ். அப்பாஸி (ஓய்வு), டாக்டர் தஸ்னீம் அப்பாஸி
நுண்ணுயிரியல்: பேராசிரியர் ஜோசப் செல்வின், டாக்டர் புசி சித்தார்த்தா
உயிரித்தொழில்நுட்பம்: பேராசிரியர் என். சக்திவேல், பேரா. ஹன்னா ஆர். வசந்தி
இயற்பியல்: டாக்டர் சி. ஆர். மரியப்பன், பேரா. ஆர். முருகன், பேராசிரியர் ஆர். பவ்மிக், பேரா. என். சத்தியநாராயணா (ஓய்வு), மறைந்த பேராசிரியர் கே. பொற்செழியன்
கணிதம் (காரைக்கால்): டாக்டர் பிரகாஷ் ஜெயவேல்
இரசாயனவியல்: பேராசிரியர் பினோய் கிருஷ்ண சாஹா
கணினி அறிவியல் (காரைக்கால்): டாக்டர் என். தீபா
உயிர்தகவலியல்: டாக்டர் மொஹனே குமார்
பசுமை மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல்: டாக்டர் எஸ். சுபாங்கர் சட்டர்ஜீ
உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்: பேராசிரியர் ஜி. சேகல் கிரண்
உயிர்வேதியியல் மற்றும் மூலக்கூறு உயிரியல்: பேராசிரியர் பி. பி. மாத்தூர்(ஓய்வு)
பண்பாடு மற்றும் கலாச்சார உறவுகள் இயக்ககம்: பேராசிரியர் ராஜீவ் ஜெயின் (ஓய்வு)
இந்நிகழ்வு தனிப்பட்ட சிறப்பை மட்டுமல்லாமல், புதுவைப் பல்கலைக்கழகத்தின் வலுவான ஆராய்ச்சியையும் உலகளாவிய அறிவியல் முன்னேற்றத்திற்கான பங்களிப்பையும் கொண்டாடியது.





















