President Droupadi Murmu: நாகரிகம், கலாச்சாரத்தின் தொட்டில்: சென்னைப் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் புகழாரம்!
குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக விளங்கி வருவதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பேசிய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக விளங்கி வருவதாகப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
’’சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இன்று நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த பிராந்தியம், நாகரிகம் மற்றும் கலாச்சாரத்தின் தொட்டிலாக விளங்கி வருகிறது. சங்க கால இலக்கியத்தின் மரபு வழி, இந்தியாவின் மதிப்புமிக்க பாரம்பரியமாகும். திருக்குறளில் பாதுகாக்கப்பட்ட மாபெரும் ஞானம், பல நூற்றாண்டுகளாக நம் அனைவரையும் வழிநடத்தி வருகிறது.
உங்கள் பல்கலைக்கழகத்துக்கு வளமான வரலாறும் புகழ்பெற்ற மரபும் உள்ளது. இந்தியாவின் ஆறு முன்னாள் குடியரசு தலைவர்கள் இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்களாக இருந்தவர்கள். இன்று நீங்கள் நடந்து செல்லும் அதே பாதையில் அவர்களும் சென்றுள்ளனர் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய விஷயம்’’.
இவ்வாறு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பேசும்போது, ”பாலின சமத்துவத்திற்கான கோயிலாக சென்னை பல்கலைக் கழகம் விளங்குகிறது. சிறந்த தலைவர்களை சென்னை பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. எந்தவொரு கவலையிலும் நீங்கள் மூழ்கிவிடக்கூடாது என்று அனைத்து மாணவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒரு வாய்ப்பு எப்பொழுதும் இருக்கும், உங்கள் திறமையில் நம்பிக்கை வைத்து முன்னேறுங்கள். தேசம் மற்றும் உலகம் முழுவதும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு கற்றல் அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சென்னை பல்கலைக்கழகம் முன்னணியில் இருக்க வேண்டும்.
பாலின சமத்துவம்
பாலின சமத்துவத்திற்கு சென்னை பல்கலைக்கழகம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. பெண் குழந்தைகளின் கல்வியில் முதலீடு செய்வதன் மூலம், நம் நாட்டின் முன்னேற்றத்தில் முதலீடு செய்கிறோம்’’ என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பேசினார்.
முன்னதாக முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, ’’முன்னாள் குடியரசுத் தலைவர்கள் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சீவ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன் மற்றும் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துள்ளனர். நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன் படித்த பல்கலை. இது. நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்ட பலர் இங்கு படித்துள்ளனர்.
தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக இருக்கிறது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். இந்தியாவில் தலைசிறந்த 100 கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 நிறுவனங்கள் உள்ளன.
தலைசிறந்த 190 பல்கலைக்கழகங்களில் 21 தமிழ்நாட்டில்தான் உள்ளன.
தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
தலைசிறந்த 100 ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன.
தலைசிறந்த 200 பொறியியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன.
தலைசிறந்த மேலாண்மைக் கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளன.
190 மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளன.
40 பல்மருத்துவக் கல்வி நிறுவனங்களில் 9 தமிழ்நாட்டில் உள்ளன.
50 சட்டக் கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளன.
50 கட்டடக் கலைக் கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளன.’’
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசினார்.