விழுப்புரம் : ப்ளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் 21,675 மாணவ, மாணவியர்..
பிளஸ் 2 பொதுத்தேர்வு விழுப்புரம் மாவட்டத்தில் 21,675 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர்
தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வியாழக்கிழமை) தொடங்கி வருகிற 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 34 தேர்வு மையங்கள், விழுப்புரம் கல்வி மாவட்டத்தில் 45 தேர்வு மையங்கள், செஞ்சி கல்வி மாவட்டத்தில் 17 தேர்வு மையங்கள் என 96 தேர்வு மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 186 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரத்து 565 மாணவர்களும், 11 ஆயிரத்து 110 மாணவிகளும் என மொத்தம் 21 ஆயிரத்து 675 மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்த தேர்வு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். தேர்வின் போது மாணவர்கள் எந்த ஒழுங்கீன செயல்களிலும் ஈடுபடாத வண்ணம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையின் மூலம் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தடையற்ற மின்சார வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் மாதிரி அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது :-
விழுப்புரம் மாவட்டத்தில் பொதுத் தேர்வின் போது மின்தடை ஏற்படாதவாறு மின் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது ஒவ்வொரு தேர்வு மையங்களிலும் இரண்டு காவலர்கள் என அனைத்துப்பள்ளிகளிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ் தளத்தில் இடம் ஒதுக்கப்பட்டு கூடுதலாக நேரம் வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த தேர்வையொட்டி சென்னை அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தில் இருந்து வினாத்தாள்கள் பெறப்பட்டு அவை விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, செஞ்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திண்டிவனம் மாவட்ட கல்வி அலுவலகம், திருக்கோவிலூர் லட்சுமி வித்யாலயா பள்ளி ஆகிய இடங்களில் பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
இதைதொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர், விழுப்புரம் மாவட்டத்தில் பாலியல் சீண்டல் உள்ளிட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கடந்த ஒரு மாதத்தில் நான்கு பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பாலியல் வழக்கில் சிக்கும் ஆசிரியர்கள் மீது எவ்வித பாரபட்சமும் இன்றி மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும். மாவட்ட நிர்வாகம் எப்போதும் இது போன்ற விவகாரங்களில் சமாதானப் போக்கை கடைபிடிக்காது என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.