Private School Recognition: அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஓராண்டு அங்கீகாரம்: பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி எனப் பல்துறை அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி எனப் பல்துறை அங்கீகாரம் பெறாத 729 தனியார் பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு அங்கீகாரம் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
மாணவ, மாணவியர்களின் நலன் கருதி பள்ளிகளில் பள்ளி வாகனங்களில் ஏற்படும் விபத்துகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பள்ளிக் கட்டடங்களுக்கான வரைபட அனுமதி உரிய அலுவலரிடம் முறையாகப் பெற்ற பின்னரே கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னர்வரை பள்ளிக் கட்டிங்களுக்கான வரைபட அனுமதி, நகர் மற்றும் ஊரமைப்புத் துறை / உள்ளூர் திட்டக் குழுமம்/ சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் பெறப்பட வேண்டும் என எவ்வித அரசாணையும் இத்துறை மூலம் வழங்கப்படாத நிலையில். உள்ளாட்சி அமைப்பிடம் பெறப்பட்ட பள்ளிக் கட்டட வரைபட அனுமதியினைக் கொண்டு பள்ளி தொடங்க அனுமதி மற்றும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டு வந்துள்ளது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம். 2009இன்படி உரிய அங்கீகாரம் பெறாமல் பள்ளிகளை நடத்துவது சட்டத்தை மீறிய செயல் என்பதைக் கருத்தில் கொண்டும். பள்ளி வாகனங்களின் தரச்சான்றினை புதுப்பிக்கவும், பள்ளிகளில் ஏற்படும் சிறு சிறு நிர்வாக பிரச்சனைகளைத் தீர்க்கவும், பள்ளிகளுக்கு அங்கீகாரம் தேவை என்பதாலும், பள்ளிகளில் பயின்று வரும் மாணவ / மாணவிகளின் நலன் கருதியும், ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டு நடைபெற்றுவரும் பள்ளிகள் உள்ளாட்சி அமைப்பிடம் பள்ளிக்கட்டட வரைபட அனுமதி பெற்றிருப்பின், அப்பள்ளிகளுக்கு நகர் மற்றும் ஊரமைப்புத் துறை உள்ளூர் திட்டக்குழுமம் , சென்னை பெருநகர வளாச்சிக் குழுமத்தில் கட்டட வரைபட அனுமதி பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் 31.05.2016 வரை பள்ளிகளுக்கு தற்காலிக தொடர் அங்கீகாரம் வழங்க ஆணையிடப்பட் டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக 31.05.2022 வரை பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்க அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் கூறும்போது, கொரானா பரவல் காரணமாக 2௦20-2021ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் இணைய வழியாக கட்டட வரன் முறைக்கு பள்ளி நிர்வாகங்களால் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டது எனவும், பள்ளிக் கட்டட வரன்முறைக்கு விண்ணப்பித்த 811 பள்ளிகளில் 82 பள்ளிகளுக்கு மட்டுமே ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும், 729 பள்ளிகளுக்கு இன்னமும் உரிய ஆணை வழங்கப்படாமல் நிலுவையாக உள்ளதைக் குறிப்பிட்டு உடன் உரிய ஆணை வழங்க தனியார் பள்ளிகள் சங்கத்தால் நீதிப்போராணை மனு 6358 / 2022 தொடரப்பட்டு வழக்கு நிலுவையாக உள்ளது.
இவ்வாறான நிலையில். பள்ளி நிர்வாகங்கள் பள்ளிக் கட்டட வரன்முறைக்கு நகர் மற்றும் ஊரமைப்புத் துறை / உள்ளூர் திட்டக் குழுமம் / சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு 6 மாத காலத்திற்குள் விண்ணப்பித்து அதற்கான ஆவண நகலை உரிய அலுவலரிடம் முன்னிலைப்படுத்தினால் 01.06.2022 முதல் 31.05.2023 வரை அப்பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கிட ஆணை வழங்குமாறு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அரசினைக் கோரியுள்ளார்.
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் கருத்துருவினை அரசு பரிசீலினை செய்து பள்ளி மாணாக்கர்களின் நலனைக் கருதி பள்ளிக் கட்டடங்கள் சார்பாக உரிய அமைப்பிடமிருந்து ஒப்புதல் பெறாத சுயநிதியில் செயல்படும் அனைத்து வகையான பள்ளிகள் மற்றும் நிதி உதவிபெறும் அனைத்து வகையான பள்ளிகள், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை , உள்ளூர் திட்டக்குழுமம் , சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு, குறிப்பிட்டுள்ள காலத்திற்குள் விண்ணப்பித்து அதற்கான ஆவண நகலை உரிய அலுவலரிடம் முன்னிலைப் படுத்த வேண்டும்.
அத்தகைய பள்ளிகளுக்கு 01.06.2022 முதல் 31.05.2023 வரை தொடர் அனுமதி / அங்கீகாரம் வழங்க பள்ளிக்கல்வி ஆணையர், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் , தொடக்கக் கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்கி அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.