இனி இந்த நுழைவுத்தேர்வுகளை மட்டுமே என்டிஏ நடத்தும்; விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளியா? பின்னணி என்ன?
தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை இனி உயர் கல்வி சார்ந்த நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஏற்கெனவே என்டிஏ நடத்திய நீட், ஜேஇஇ உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் முறைகேடு ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு வெளியான நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
எதன் அடிப்படையில் இந்த முடிவு?
இதுதொடர்பான அறிவிப்பை மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ’’தேசியத் தேர்வுகள் முகமை இனி உயர் கல்வி சார்ந்த நுழைவுத் தேர்வுகளை மட்டுமே நடத்தும். அடுத்த ஆண்டில் இருந்து வேறு எந்த ஆட்சேர்க்கைக்கான தேர்வுகளையும் நடத்தாது. 2025ஆம் ஆண்டில் இருந்து இந்த முறை அமலுக்கு வரும்.
தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
2025-ல் மறுகட்டமைக்கப்படும் என்டிஏ
அதேபோல, 10 புதிய பணியிடங்களுடன் என்டிஏ 2025-ல் மறுகட்டமைக்கப்படும். தவறுகளே நிகழாத வகையில், என்டிஏ இயங்குவதை உறுதிசெய்ய பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்படும்’’ என்று அமைச்சர் பிரதான் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் மேலும் பேசிய அமைச்சர் பிரதான், ‘’நீட் தேர்வில் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். 10,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடி ஜேஇஇ முதன்மை தேர்வுகளில் தேர்ச்சி பெற்றனர். 2,000+ மாணவர்கள் ஐஐடி-க்களில் சேர்க்கை பெற்றனர். சிபிஎஸ்இ பாடத்திட்ட அனுமதி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது.
கல்வியில் பெண்கள் ஒரு உந்து சக்தியாக உருவெடுத்துள்ளனர். 2014 முதல் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை 30% க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. 2014 மற்றும் 2024 க்கு இடையில் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட ஆசிரியர்களில் 61% க்கும் அதிகமானோர் பெண்கள்’’ என்று தெரிவித்தார்.
குற்றச்சாட்டும் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளும்
முன்னதாக, நீட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளில் 2024ஆம் ஆண்டு ஆள் மாறாட்டம், தேர்வுத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதைத் தொடர்ந்து ஏராளமான தேர்வுகள், ரத்து செய்யப்பட்டு, மறு தேர்வுகளும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.