CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் - CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
CSIR UGC NET Exam: ஒத்திவைக்கப்பட்ட CSIR-UGC-NET தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
CSIR UGC NET Exam: ஜூன் மாதத்தில் நடைபெறவிருந்த CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேர்வு ஒத்திவைப்பு:
தவிர்க்க முடியாத சூழல் மற்றும் லாஜிஸ்டிக் சிக்கல்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 25 முதல் 27 வரை திட்டமிடப்பட்டிருந்த CSIR-UGC-NET கூட்டுத் தேர்வை தேசிய தேர்வு முகமை (NTA) ஒத்திவைத்து அறிவித்துள்ளது. தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை அதிகாரப்பூர்வ NTA இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் NTA உதவி மையத்தை 011-40759000 அல்லது 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது csirnet@nta.ac.in என்ற மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியர்களுக்கான ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப் (JRF), அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பாடங்களில் விரிவுரையாளர் (LS)/உதவி பேராசிரியர் பணிக்கான தகுதியை CSIR-UGC-NET தேர்வு தீர்மானிக்கிறது.
UGC-NET தேர்வு ரத்து:
முன்னதாக புதன்கிழமை, மத்திய கல்வி அமைச்சர் UGC-NET தேர்வை ரத்து செய்தார். இது ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் ஜூனியர் ரிசர்ச் பெல்லோஷிப், உதவி பேராசிரியர் பதவிகள், இந்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பிஎச்டி சேர்க்கைக்கான இந்திய நாட்டினரின் தகுதியை தீர்மானிக்க நடத்தப்படுகிறது.
உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பின், (14C) தேசிய சைபர் கிரைம் அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவின் எச்சரிக்கையை தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வின் நேர்மைத்தன்மை சமரசம் செய்யப்பட்டிருக்கலாம் என்று பரிந்துரைக்கப்பட்டதால் தேர்வு ரத்து செய்யப்பட்டது. போட்டித் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மோடி அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், தேர்வு ரத்து, தேர்வு ஒத்திவைப்பு போன்ற அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
மத்திய அரசின் மீது குற்றச்சாட்டுகள்:
கல்வி நிறுவனங்களை பாஜக கைப்பற்றி, இந்த குற்றங்களுக்கு வசதி செய்து தருவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், "நான் பல்வேறு அமைப்புகளில் நிறுவனங்களை கையகப்படுத்துதல் பற்றி பேசினேன். இது கல்வி நிறுவனங்களிலும் நடக்கிறது. வினாத்தாள் கசிவுகளுக்கு காரணம் அனைத்து துணைவேந்தர்களையும் கல்வி அமைப்பையும் பிஜேபி கைப்பற்றியதுதான். தாய் அமைப்பு (ஆர்எஸ்எஸ்)," என ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
நீட் மற்றும் யுஜிசி-நெட் தேர்வு ரத்து தொடர்பான முறைகேடுகள் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், உயர்மட்டக் குழுவை அமைப்பதாக அறிவித்தார். டார்க்நெட்டில் கேள்விகள் உள்ளன என்பது குறித்து சைபர் கிரைம் குழுவிடம் இருந்து தகவல் கிடைத்ததும், அசல் வினாத்தாள்கள் உடன் ஒப்பிட்டுப் பார்த்ததில் மீறல் உறுதிசெய்யப்பட்டது. சிபிஐ விசாரணையைத் தூண்டியது மற்றும் தேர்வை அதன் நேர்மையைப் பேணுவதற்கான முடிவைத் தூண்டியது என்று தர்மேந்திர பிரதான் கூறினார்.