NTA NCET 2023: ஆசிரியர் பணியில் சேர தேசிய பொது நுழைவுத் தேர்வு; விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்
மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் பணியில் சேர நடத்தப்படும் தேசிய பொது நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
2020ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு அறிமுகம் செய்த தேசிய கல்விக் கொள்கையின்படி, ஆசிரியர் படிப்புக்கு தேசிய பொது நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் மூலம், ஐஐடி, என்ஐடி, ஆர்ஐஇ போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களிலும் குறிப்பிட்ட சில மத்திய, மாநிலப் பல்கலைக்கழகங்களிலும் ஆசிரியர் பணியில் சேரலாம்.
பிஏ அல்லது பிஎஸ்சி பாடத்திட்டத்துடன் பிஎட் இணைத்து கற்பிக்கப்படுவதே ஒருங்கிணைந்த 4 ஆண்டு ஆசிரியர் பட்டப் படிப்பாகும். இந்த படிப்பி சேர, தேசிய அளவிலான பொது நுழைவு தேர்வில் (என்சிஇடி - National Common Entrance Test) தேர்ச்சி பெற வேண்டும். மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளைப் போலவே ஆசிரியர்களுக்கான தேர்வையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமையே நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான என்சிஇடி நுழைவுத் தேர்வு ஜூலை மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 26-ம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களை பதிவு செய்வதற்கான காலக்கெடு இன்று (ஜூலை 19) முடிவடைய இருந்தது.
எனினும் தேர்வர்களின் பல்வேறு கோரிக்கைகளை ஏற்று என்சிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை என்டிஏ நீட்டித்துள்ளது. விருப்பம் உள்ள தேர்வர்கள் /ncet.samarth.ac.in/ என்னும் இணைய முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க ஜூலை 25-ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நேரில் சென்றும் விண்ணப்பிக்கலாம்
இணையதள வசதி இல்லாதவர்கள் விண்ணப்பிக்கவும் தொலைதூர கிராமப் பகுதிகளில் இருஅதிக அளவிலான தேர்வர்கள் கலந்துகொள்ளவும் ஏதுவாக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் 34 உதவி மையங்களை என்டிஏ அமைத்துள்ளது. அந்த வகையில், தமிழ்நாட்டில் தலைநகர் சென்னையில், கீழ்ப்பாக்கத்தில் உள்ள பாரதிய வித்யாபவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் சிபிஎஸ்இ பள்ளியில் என்டிஏ உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களுடன் இந்த மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. இந்த சேவை முற்றிலும் இலவசம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு எப்படி?
தமிழ், ஆங்கிலம், இன உட்பட 13 மொழிகளில் கணினி வாயிலாக தேர்வு நடத்தப்படும். இதற்காக நாடு முழுவதும் 178 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஹால் டிக்கெட் வெளியீடு,விண்ணப்பிக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. தேர்வர்கள் இந்த விவரங்களை www.nta.ac.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்
தேர்வு எப்போது நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகவில்லை. தேர்வு நடைபெறுவதற்கு 3 நாட்களுக்கு முன்னதாக, ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு முறை குறித்த முழுமையான தகவல்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/ncet-site-admin23/pn/Public+Notice+for+Inviting+Online+Application+of+NCET+2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
உதவி எண்: +91-11-40759000 / 011 – 69227700
இ- மெயில் முகவரி: ncet@nta.ac.in, https://ncet.samarth.ac.in
கூடுதல் விவரங்களுக்கு: https://cdnasb.samarth.ac.in/ncet-site-admin23/pn/Public+Notice+for+creating+Help+Centre.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து காணவும்.