CBSE Result 2021: சி.பி.எஸ்.இ தேர்வு மதிப்பெண்களில் திருப்தி இல்லையா? அப்ளை செய்ய ஸ்டெப்-பை-ஸ்டெப் வழிமுறை இதோ..
10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளில் திருப்தியில்லாத சி.பி.எஸ்.இ மாணவர்கள் எவ்வாறு புகார் அளிக்க வேண்டும் என்று கீழே விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், நாடு முழுவதும் பல மாநிலங்களில் கல்விநிலையங்கள் செயல்படவில்லை. இந்த நிலையில், முதன்முறையாக நாடு முழுவதும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கான 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இதையடுத்து, சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வின்றி அனைவரும் தேர்ச்சி என்று சி.பி.எஸ்.இ. கல்விவாரியம் அறிவித்தது. இதையடுத்து, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் கடந்த 3-ஆம் தேதி வெளியிடப்பட்டது. மேலும், சி.பி.எஸ்.இ. 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 30-ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், சி.பி.எஸ்.இ. வெளியிட்ட மதிப்பெண் பட்டியலில் திருப்தியில்லாத மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை பள்ளிகளில் புகார் அளிக்கலாம் என்றும், அவர்களது புகார் குறித்து பள்ளி நிர்வாகம் உரிய விசாரணை நடத்தி மாணவர்களுக்கு பதிலளிக்கும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பதிலளித்தார். மேலும், மாணவர்கள் விருப்பப்பட்டால் அவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
புகார் தெரிவிக்க விண்ணப்பிப்பது எப்படி?
- மாணவர்கள் தங்களது புகாருடன் கூடிய விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்த புகார் விண்ணப்பங்கள் தேர்வுக்குழுவிற்கு பரிசீலிக்கப்படும்.
- அந்த குழுவினர் மாணவர்கள் அளித்துள்ள புகாரின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்வார்கள்.
- அந்த குழுவினர் மாணவர்களின் புகார் குறித்து முடிவெடுக்கும் முன்பு மாணவர்களின் அனைத்து ஆவணங்களையும் சரிபார்ப்பார்கள்.
- அந்த குழுவினர் மாணவர்களின் புகாரின் அடிப்படையில் அவர்களுக்கான தேர்வு முடிவுகள் சரியில்லை என்று கண்டறிந்தால், அவர்கள் சி.பி.எஸ்.இ. மண்டல அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் அந்த தகவலை சி.பி.எஸ்.இ. தலைமை அலுவலகத்திற்கு அறிவிப்பார்கள்.
- ஒருவேளை அந்த குழுவினர் மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட மதிப்பெண் பட்டியலில் எந்த புகாரையும் கண்டறியவில்லை என்றால், அந்த தகவலையும் மாணவர்களுக்கு தெரிவிப்பார்கள்.
முன்னதாக, சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டவுடன், மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியலை தயாரிக்க ஒரு குழு தயாரிக்கப்பட்டது. அந்த குழுவினர் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் 10 மற்றும் 11-ஆம் வகுப்பில் நடைபெற்ற தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நடைபெற்ற பருவத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டனர். மேலும், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் திருப்தியில்லாத மாணவர்கள் மறுதேர்வு எழுத விரும்பினால் அவர்களுக்கு ஆகஸ்ட் 16-ந் தேதி முதல் செப்டம்பர் 15-ந் தேதி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.