Jactto Geo: வாபஸ் இல்லை; திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு
ஜனவரி 5 அன்று முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
![Jactto Geo: வாபஸ் இல்லை; திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு No withdrawal; Protest will go ahead as planned: Jactto Geo announcement Jactto Geo: வாபஸ் இல்லை; திட்டமிட்டபடி போராட்டம் நடக்கும்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/03/b2f6a3e2d55abcd4fcb7b966eabd26011672729501533332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஜனவரி 5 அன்று முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அக விலைப்படியைத் தொடர்ச்சியாக ஆறு மாத காலம் தாழ்த்துவதோடு நிலுவைத் தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
''ஜனவரி 1 அன்று முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வந்த அழைப்பினை ஏற்று, ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள், முதலமைச்சரை நேற்று தலைமைச் செயலகத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். இச்சந்திப்பின்போது, 1.1.2023 முதல் 4 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டதற்கு நன்றியினை தமிழக முதலமைச்சருக்குத் தெரிவித்துக் கொண்டனர்.
மேலும், அக விலைப்படியினை மத்திய அரசு வழங்கிய தேதியில் வழங்காமல் தொடர்ச்சியாக ஆறு மாத காலம் தாழ்த்துவதோடு நிலுவைத் தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதியம்- சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக் கூலியில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர். ஊர்ப்புற நூலகர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகையினை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.
தமிழக முதலமைச்சர் பங்கேற்ற வாழ்வாதார மாநாட்டில் முதல்வரிடம் ஜாக்டோ ஜியோ சார்பில் வழங்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர், அரசு பணியாளர் மற்றும் துறை பிரிவு வாரி ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கைகள் குறித்தும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் பேசினர்.
இதனைத் தொடர்ந்து. மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டமானது இரா.தாஸ், ஆ.செல்வம். ஜே.காந்திராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
ஜனவரி 5 அன்று முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடும் வகையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்களிலும் நடைபெறும்.
அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகளைத் திட்டமிடுவதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவாறு, எதிர்வரும் 8.1.2023 அன்று மதுரையில் ஜாக்டோ ஜியோ உயர் மட்டக் கூட்டம் நடைபெறும். பிற்பகல் 2.00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர் கூட்டமும் அதனைத் தொடர்ந்து 3.00 மணிக்கு உயர் மட்டக் குழுக் கூட்டமும் நடைபெறும்''.
இவ்வாறு ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)