மாணவர்களுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை; என்எம்எம்எஸ் தேர்வுக்கு தொடங்கிய விண்ணப்பப் பதிவு; எப்படி?
இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 31.12.2024 முதல் 24.01.2025 -க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 24.01.2025 -க்குள் ஒப்படைக்க வேண்டும்.
2024-2025 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (என்எம்எம்எஸ்) தேர்வு 22.02.2025 அன்று நடைபெறவுள்ளது. இத்தோவிற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசுப் பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 31.12.2024 முதல் 24.01.2025 -க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 24.01.2025 -க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசுப் பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு, பிப்ரவரி 2025 NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)
- 2024-2025 கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும்மாணவ/ மாணவியர் கலந்து கொள்ளலாம்.
- உதவித் தொகை:
தேர்வில் வெற்றி பெறும் மாணவ /மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12,000/- உதவித்தொகை வழங்கப்படும்.
- தகுதி
அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் 8 ஆம் வகுப்பு பயில வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3,50,000/- ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் முறை:
NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் / பெற்றோர்களுக்கு கீழ்க்காணும் விதிமுறைகளை அறிவுறுத்துமாறு பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
* இத்தேர்வில் பங்கு பெற மாணவ /மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ளலாம்.
- NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தமது பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு வர வேண்டுமோ அதன்படி விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்தல் வேண்டும்.
மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கைபேசி எண்ணையே அளிக்க வேண்டும். உதவித் தொகை சார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அல்லது கடவுச்சொல், குறிப்பிடப்படும் கைப்பேசி எண்ணிற்கே அனுப்பப்படும் என்பதால் அக்கைப்பேசி எண்ணை குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு மாற்றாமல் இருக்கவேண்டும்.
மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி அமைந்திருக்கும் மாவட்டத்தையே குறிப்பிட வேண்டும். தாங்கள் குடியிருக்கும் மாவட்டத்தைக் குறிப்பிடக் கூடாது.
6.ஆன்லைன் கட்டணம்:
ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) விண்ணப்பப் படிவத்துடன் பணமாக பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் செலுத்த வேண்டும்.
7.தேர்வு முறை:
தேர்வு இரண்டு பகுதிகளைக் கொண்டது.
பகுதி 1 – மனத்திறன் தேர்வு (Mental Ability Test) (MAT)
பகுதி 2- படிப்பறிவுத் திறவு (Scholastic Aptitude Test) (SAT)
8.பாடத்திட்டம்:
படிப்புதவித் தேர்வு பகுதி 1 மற்றும் 11-னைப் பொறுத்தமட்டில் ஏழாம் வகுப்பிற்குரிய முழுப்பாடமும், எட்டாம் வகுப்பு முதல் மற்றும் இரண்டாம் பருவத்திற்கான பாடப்பகுதி முழுவதும் பயில வேண்டும். இப்பகுதியில் கணிதம் 20, அறிவியல் 35, சமூக அறிவியல் 35 என 90 வினாக்கள் கேட்கப்படும்.
மனத்திறன் தேர்வைப் பொறுத்தமட்டில் பாடப்பகுதி நிர்ணயமில்லை. இப்பகுதியில் 90 கேள்விகள் கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
https://tnegadge.s3.amazonaws.com/notification/NMMS/1735564145.pdf என்ற இணைப்பில் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்
கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/