டாப் 10ல் தமிழ்நாட்டின் இரண்டு பல்கலைக் கழகங்கள்.. முதலிடம் பிடித்த ஐஐடி..
இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்தியாவில் உள்ள பல்கலைக் கழகங்களின் தரவரிசைப் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10ல் தமிழ்நாட்டைச் சேர்ந்த 2 பல்கலைக் கழகங்கள் இடம்பெற்றுள்ளன.
2022ம் ஆண்டிற்கான என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டது. இந்த பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் காணொலி வாயிலாக வெளியிட்டார். இந்த பட்டியலில் இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு, முதலிடத்தையும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் இரண்டாமிடத்தையும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக் கழகம் மூன்றாமிடத்தையும், கொல்கத்தா ஜாதவ்பூர் பல்கலைக் கழகம் 4ம் இடத்தையும், கோவை அம்ரிதா விஷ்வ வித்யாபீதம் பல்கலைக் கழகம் 5ம் இடத்தையும், பனாரஸ் இந்து பல்கலைக் கழகம் 6ம் இடத்தையும், மனிப்பால் அகாடமி ஆஃப் ஹயர் எஜுகேஷன் 7ம் இடத்தையும், கல்கத்தா பல்கலைக்கழகம் 8ம் இடத்தையும், வேலூர் விஐடி 9ம் இடத்தையும், ஹைதராபாத் பல்கலைக்கழகம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது. தமிழ்நாடு அளவில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 15வது இடத்தையும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் 19வது இடத்தையும், அண்ணா பல்கலைக் கழகம் 20வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியாவில் மிகப்பெரியப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றான டெல்லி பல்கலைக்கழகம் இந்த ஆண்டும் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. கடந்த 2020ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகம் 11வது இடத்தையும், 2021ம் ஆண்டில் 12வது இடத்தையும் பிடித்திருந்தது.
இந்த தரவரிசைப் பட்டியலானது கற்றல் மற்றும் கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி, பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட 5 காரணிகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படுகிறது. அனைத்து விதமான கல்வி நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தையும், இந்திய அறிவியல் நிறுவனம் 2வது இடத்தையும், ஐஐடி பாம்பே 3வது இடத்தையும், ஐஐடி டெல்லி 5வது இடத்தையும், ஐஐடி கான்பூர் 6வது இடத்தையும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் 10வது இடத்தையும் பிடித்துள்ளது.
பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை ஐஐடி மெட்ராஸ் முதலிடத்தையும், ஐஐடி டெல்லி இரண்டாமிடத்தையும், ஐஐடி பாம்பே மூன்றாமிடத்தையும், என்ஐடி திருச்சி 8வது இடத்தையும், வேலூர் விஐடி 12வது இடத்தையும், அண்ணா பல்கலைக் கழகம் 17வது இடத்தையும், கோவை அம்ரிதா பல்கலைக்கழகம் 19வது இடத்தைப் பிடித்துள்ளது.
கல்லூரிகளைப் பொருத்தவரை டெல்லி மிராண்டா ஹவுஸ் கல்லூரி முதலிடத்தையும், டெல்லி இந்து கல்லூரி 2வது இடத்தையும், சென்னை ப்ரெசிடென்ஸி கல்லூரி 3வது இடத்தையும், சென்னை லயோலா கல்லூரி 4வது இடத்தையும், கோவை பிஎஸ்ஜி கல்லூரி 6வது இடத்தையும்- பிடித்துள்ளன.
மருத்துவக் கல்லூரிகளைப் பொறுத்தவரை டெல்லி எய்ம்ஸ் முதலிடத்தையும், சண்டிகர் பிஜிஐஎம்ஆர் கல்லூரி 2வது இடத்தையும், வேலூர் சிஎம்சி கல்லூரி 3வது இடத்தையும், புதுச்சேரி ஜிப்மர் கல்லூரி 6வது இடத்தையும், மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி 12வது இடத்தையும், ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி 15வது இடத்தையும் பிடித்துள்ளது.