NEET Marks: பூஜ்ஜியத்துக்கும் குறைவான நீட் மதிப்பெண்: அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்கள் நிலை!
சென்னையில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் பூஜ்ஜியத்துக்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![NEET Marks: பூஜ்ஜியத்துக்கும் குறைவான நீட் மதிப்பெண்: அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்கள் நிலை! negaitive NEET mark 2022: government school students NEET coaching centers shocking report NEET Marks: பூஜ்ஜியத்துக்கும் குறைவான நீட் மதிப்பெண்: அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற மாணவர்கள் நிலை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/09/51bd4443f3bb7d087803b84e032cb5e81662706772439332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னையில் 5 இடங்களில் நடத்தப்பட்ட அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்கள் பலர் பூஜ்ஜியத்துக்கும் குறைவான மதிப்பெண்களை பெற்றுள்ளதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் 346 பேரில், 265 மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளனர்.
மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் (செப்டம்பர் 7) வெளியாகின. இதில் ஒட்டுமொத்தமாக 9.93 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி விகிதம் 56.3% ஆக உள்ளது. ஒட்டுமொத்தத் தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்துள்ளது. எனினும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் 2 ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது.
அதேபோல நீட் தேர்வில் தேசிய அளவில் 715 மதிப்பெண்கள் பெற்றதே முதலிடமாக உள்ளது. தமிழக அளவில் 705 மதிப்பெண்களைப் பெற்று 30ஆவது இடத்தை த்ரிதேவ் விநாயகா என்ற மாணவர் பெற்றுள்ளார். அடுத்ததாக 43 இடத்தை ஹரிணி என்ற மாணவி பிடித்துள்ளார். இவர் 702 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் இந்த முறை 132,167 மாணவர்கள் நீட் தேர்வை எழுதி இருந்தனர். இதில் 17,517 பேர் அரசுப் பள்ளி மாணவர்கள் என்ற நிலையில், இதில் 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகளில் பல மாநிலங்கள் அதிகமான தேர்ச்சியை பெற்ற நிலையில், கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்தது.
பயிற்சி மையங்களின் போதாமையா?
தேர்வு எழுதிய 17,000 அரசுப்பள்ளி மாணவர்களின் 80% பேர் தோல்வியடைந்திருப்பதே தமிழ்நாட்டின் தேர்ச்சி விகிதம் கடுமையாக சரிந்ததற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு நீட் தேர்வு பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 5 இடங்களில் சிறப்பு நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. நன்கு பயிலும் மாணவர்கள் என்று தேர்வு செய்யப்பட்ட எலைட் மாணவர்களுக்கு, அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டது. இந்த பயிற்சி மையங்களில் 384 மாணவர்கள் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 346 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வை எழுதினர்.
அடிப்படைப் புரிதல் கூட இல்லையா?
தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இவர்களில் 81 மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வுக்குரிய தகுதி மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளதும், 265 மாணவர்கள் தோல்வி அடைந்திருப்பதும் தெரியவந்துள்ளது. தோல்வியடைந்த 265 பேரில், 5 பேர் பூஜ்ஜியத்துக்கும் கீழான மதிப்பெண்கள் (நெகட்டிவ் மதிப்பெண்கள் ) பெற்றுள்ளனர். 2 பேர் பூஜ்ஜிய மதிப்பெண்களும், 6 பேர் ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அரசின் சிறப்பு நீட் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தேர்வு எழுதிய மாணவர்களுக்கு நீட் தேர்வில் கடைப்பிடிக்கப்படும் எதிர்மறை மதிப்பெண் ( Negative Marks ) பற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லை என்பது, பூஜ்ஜியத்துக்கும் கீழாக அவர்கள் மதிப்பெண்கள் பெற்றுள்ளதன் மூலம் தெரியவந்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் உண்மையிலேயே பயிற்சி வழங்கப்பட்டதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தலைநகர் சென்னையில், அரசின் சிறப்பு நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களின் நிலையே இப்படி என்றால், மாநிலத்தின் இதர மாவட்டங்களில் குறிப்பாக கிராமப்புறங்களில் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை எப்படி இருக்கும் என்றும் கேள்வி எழுந்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)