NEET UG 2024: நீட் தேர்வில் சர்ச்சைக்குரிய கேள்விக்கு எது சரியான விடை?- உச்ச நீதிமன்றத்தில் ஐஐடி பதில்
நீட் தேர்வில் 19ஆவது கேள்விக்கு 4ஆவது ஆப்ஷனே சரியான விடை. அதாவது கதிரியக்க தனிமங்களின் அணுக்கள் நிலையானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
நீட் இளநிலைத் தேர்வில் கதிரியக்கத் தனிமங்கள் குறித்த சர்ச்சைக்குரிய 19ஆம் கேள்விக்கு 4ஆவது ஆப்ஷன்தான் சரியான விடை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் குறித்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் நரேந்தர் ஹூடா ஆஜர் ஆகி வாதாடி வருகிறார்.
நேற்று (ஜூலை 22) இரு பதில்கள் சரி என்று குறிப்பிடப்பட்ட 19ஆவது கேள்விக்கு சரியான பதிலை அளிக்க வேண்டும் என்பதற்காக, மூன்று நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும் என்று டெல்லி ஐ.ஐ.டி இயக்குனருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்த கேள்விக்குரிய பதிலை இன்று ஜூலை 23) நண்பகல் 12 மணிக்குள் உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
திரியக்க தனிமங்களின் அணுக்கள் நிலையானவை அல்ல
இந்த நிலையில் நீட் வழக்கு இன்று (ஜூலை 23) காலை விசாரணைக்கு வந்தது. அதில், ஐஐடி டெல்லி இயக்குநர் பேராசிரியர் பானர்ஜி 3 பேர் கொண்ட இயற்பியல் பேராசிரியர்கள் குழுவை நியமித்து, கேள்வியை ஆய்வு செய்தார். அதில், அவர்கள் 4ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று தெரிவித்துள்ளனர். அதாவது கதிரியக்க தனிமங்களின் அணுக்கள் நிலையானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் தெரிவித்துள்ளார்.
என்டிஏ வெளியிட்ட விடைக் குறிப்பில் 4ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று கூறப்பட்டிருந்தது. எனினும் பழைய என்சிஇஆர்டி புத்தகத்தில் 2ஆவது ஆப்ஷனே சரியான விடை என்று குறிப்பிட்டுள்ளதால், இரண்டு ஆப்ஷன்களுக்கும் மதிப்பெண் அளிக்கவேண்டும் என்று மாணவர்கள் வாதிட்டு வந்தனர். இந்த நிலையில் என்டிஏ வெளியிட்ட விடைக் குறிப்பான 4ஆவது ஆப்ஷனே 19ஆவது கேள்விக்கு சரியான விடை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய பாடப் புத்தகத்தில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு
இதனால் பழைய பாடப் புத்தகத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்ப்புக் குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.